
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் தங்களது முதல் கோப்பைக்காக மல்லுக்கட்டியதால் எதிர்பார்ப்பு எகிறியது.
‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய இதையடுத்து விராட் கோலியும், பில் சால்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் ஓவரிலேயே சிக்சர், பவுண்டரியுடன் அட்டகாசமாக தொடங்கிய பில் சால்ட் 16 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த மயங்க் அகர்வால் 24 ரன்களிலும், கேப்டன் ரஜத் படிதார் 26 ரன்களிலும் நடையை கட்டினர்.
மறுமுனையில் விராட் கோலி 15 ஓவர் வரை களத்தில் நின்றும் மந்தமாக ஆடி அரைசதம் கூட அடிக்காமல் 42 ரன்னில் அவுட்டாகி வெளியேற, 5-வது விக்கெட்டுக்கு லியாம் லிவிங்ஸ்டனும், ஜிதேஷ் ஷர்மாவும் இணைந்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.
ஸ்கோர் 167-ஐ (16.5 ஓவர்) எட்டிய போது லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும், ஜிதேஷ் ஷர்மா 24 ரன்னிலும் வெளியேற, அடுத்து வந்த ரொமாரியோ ஷெப்பார்டு 17 ரன்னிலும், குருணல் பாண்ட்யா 4 ரன்னிலும், புவனேஷ்வர்குமார் 1 ரன்னிலும் நடையை கட்டினர். இதனால் 200 ரன்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டிருந்த பெங்களூருவின் ஸ்கோர் அதற்குள் அடங்கிப் போனது.
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜாமிசன், அர்ஷ்தீப்சிங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 191 ரன் இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியான்ஷ் ஆர்யாவும், பிரப்சிம்ரன் சிங்கும் களம் கண்டனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா 24 ரன்னில் அவுட்டாகி வெளியேற 2-வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்லிஸ் வந்தார். மற்றொரு தொடக்க வீரர் சிம்ரன் சிங் 26 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற இதைத் தொடர்ந்து நுழைந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் கேட்ச்சாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து வந்த நேஹல் வதேராவும் 15 ரன்னில் வெளியேற கடைசி கட்டத்தில் ஷசாங் சிங் ( 61 ரன், ஆட்டம் இழக்காமல்)போராட்டம் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 184 ரன்களே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை சொந்தமாக்கியது. அத்துடன் 18 ஆண்டு கால விராட் கோலியின் கோப்பை ஏக்கம் தணிந்தது. நீண்ட கால கனவு நனவான சந்தோஷத்தில் மைதானத்தில் மண்டியிட்டு நன்றி செலுத்திய கோலி, பின்னர் மனைவியை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர்குமார், குருணல் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அந்த அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகையாக கிட்டியது. வெற்றியை பெங்களூரு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதுவரை சாம்பியன்கள் :
ஐபிஎல் போட்டி தொடங்கிய 2008-ல் இருந்து 2025 வரை கோப்பையை வென்ற அணிகள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
2008- ராஜஸ்தான்
2009- டெக்கான் சார்ஜர்ஸ்
2010- சென்னை
2011- சென்னை
2012- கொல்கத்தா
2013- மும்பை
2014- கொல்கத்தா
2015- மும்பை
2016- ஐதராபாத்
2017- மும்பை
2018- சென்னை
2019- மும்பை
2020- மும்பை
2021- சென்னை
2022- குஜராத்
2023- சென்னை
2024- கொல்கத்தா
2025-பெங்களூரு