

பெங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் மூலிகை சிகிச்சைகள் மூலம் கிட்டத்தட்ட ரூ.48 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகவும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறை, விஜய் குருஜி மற்றும் ஆயுர்வேத கடை உரிமையாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு ஞானபாரதி அருகே வசித்து வரும் தேஜஸ் என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆண்மை குறைவு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தேஜஸ், கெங்கேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் விஜய் குருஜி என்பவர் ஆண்மை குறைவு பிரச்சினைக்கு ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருவது தெரிவந்ததையடுத்து அவரிடம் சென்று தனது பிரச்சனையை கூறியுள்ளார்.
இதையடுத்து விஜய் குருஜி கூறியபடி யஷ்வந்தபுரத்தில் உள்ள விஜயலட்சுமி ஆயுர்வேத மருந்து கடைக்கு சென்று, தேஜஸ் மருந்து வாங்கியுள்ளார். அந்த மருந்து ஹரித்வாரில் இருந்து பிரத்யேகமாக பெறப்பட்டதாக கூறி, விஜய் குருஜி பரிந்துரைத்துள்ளார்.
அதாவது, ஒரு கிராம் மருந்து மற்றும் ஒரு தைலத்தின் விலை ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி மருந்துக்கான பணத்தை ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கோ அல்லது வேறு யாரையும் உடன் அழைத்து வரக்கூடாது என்று விஜய் குருஜி கடுமையான நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுகிறது, இந்த விதிகளை மீறினால் மருந்து பயனற்றதாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டி மீண்டும் மீண்டும் வாங்கும்படி கட்டாயப்படுத்தினார். அதனை தொடர்ந்து மனைவி மற்றும் பெற்றோரிடமிருந்து ரூ.17 லட்சம் கடன் வாங்கி மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அதன்பிறகும், அவருக்கு ஆண்மை குறைவு பிரச்சினை சரியாகாததால், தனியார் வங்கியில் ரூ.20 லட்சம் கடன் வாங்கி ஆண்மை குறைவுக்கான மருந்து மற்றும் தைலத்தை வாங்கியுள்ளார்.
அந்த மருந்துகளை சாப்பிட்ட சில நாட்களில் தேஜசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேஜசின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது ஆண்மை குறைவு பிரச்சினைக்கு சாப்பிட்ட ஆயுர்வேத மருந்து காரணமாக அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு தேஜஸ் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் ஆண்மை குறைவு பிரச்சினைக்காக ரூ.48 லட்சத்தை தேஜஸ் செலவழித்து இருந்தார்.
தான் ஏமாற்றப்பட்டுள்ளதையும் உணர்ந்த தேஜஸ், விஜய் குருஜி மற்றும் விஜயலட்சுமி ஆயுர்வேத கடையின் உரிமையாளர்கள் மீது மோசடி, உடல்நலத்திற்கு ஆபத்து மற்றும் ஏமாற்றும் மருத்துவ நடைமுறைகள் மூலம் சுரண்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.