
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் சைபர் கிரைம் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு காவல் துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பான செய்திகளும் அவ்வப்போது வெளியாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இருப்பினும் கூட சைபர் குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.
சைபர் குற்றவாளிகள் மக்களின் பணத்தாசையைத் தூண்டி ஏமாற்றி வருகின்றனர். அவ்வப்போது புதுப்புது வழிகளில் பணத்தை ஏமாற்றும் கும்பல், இப்போது வங்கிக் கணக்கைக் கூட விலைக்கு வாங்கத் தொடங்கி விட்டனர். இது காவல்துறைக்கு புதிய சிக்கலை உருவாக்கி விட்டது.
பணத்தை ஏமாந்தவர்கள் உடனடியாக புகார் கொடுத்தால் மட்டுமே, சைபர் குற்றங்களில் பணத்தை விரைந்து மீட்க முடியும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களைத் தடுக்க காவல் துறை மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டத்தக்க வகையில் உள்ளன. ஆனால் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம்.
போலியான வங்கி அல்லது நிதி நிறுவனங்களைத் தொடங்கி, பொதுமக்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி வருகிறது மோசடி கும்பல். பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு யாருடைய பெயரில் உள்ளது என்பதை அறிந்து கொண்டு மோசடி கும்பலைப் பிடிக்க மும்பை, குஜராத் மற்றும் பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு காவல் துறையினர் செல்கின்றனர். அங்கு சென்று வங்கிக் கணக்கு உரிமையாளர்களை விசாரித்த போது தான் காவல் துறைக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை கொடுத்து வங்கிக் கணக்கு அட்டை, ஏடிஎம் கார்டு மற்றும் காசோலை புத்தகம் ஆகியவற்றை மோசடி கும்பல் விலைக்கு வாங்கி விடுகிறார்கள். இப்படி வாங்கப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சைபர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் காவல் துறைக்கு சிரமமாக உள்ளது.
பணத்தை இழந்தவர்கள் விரைவாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் தான், பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கி, பணத்தை மீட்க முடியும். பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். ஒருவேளை பணத்தை இழந்து ஏமாந்து விட்டால், காலம் தாழ்த்தாமல் புகார் கொடுக்க வேண்டியது அவசியம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம், சிபிஐ எனச் சொல்லி டிஜிட்டல் கைது என்ற பெயரில் ரூ.97 இலட்சத்தை மர்ம நபர்கள் ஏமாற்றி உள்ளார்கள்.
இதுகுறித்து இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் கூறுகையில், “சிம் கார்டு மற்றும் மொபைல் போன்களை புதிதாக வாங்குவது போல் தற்போது வேறொருவரின் வங்கிக் கணக்கையும் விலைக்கு வாங்கி ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் விழ்ப்புணர்வுடன் இருப்பதோடு, புகார் கொடுப்பதில் விரைந்து செயல்பட வேண்டும்” என எச்சரித்துள்ளார்.