ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின் என்பவர் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம் வருகிறார். வாருங்கள் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் பார்ப்போம்.
பிச்சை எடுக்கிறவன்லா பணக்காரனா இருக்கான் என்று சினிமாவில் ஜோக்குக்காக சொல்லி கேட்டிருப்போம். ஆனால், நிஜத்தில் இது சாத்தியமா என்று யோசிக்கும்போது “அது எப்படி சாத்தியமாகும்?” என்று கடந்துச் சென்றுவிடுவோம்.
ஆனால், தற்போதை நிலைமையை பார்த்தால் பிச்சைக்காரர்கள் நிஜமாகவே நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆம்! நிறைய சில்லறைகளையும் நோட்டுகளையும் வைத்து எண்ணும்போது நம்மைவிட அவர்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்பது போல் இருக்கிறது.
குறிப்பாக பேருந்து நிலையங்களிலும், கோவில் வாசல்களிலும் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். அப்படித்தான் பாரத் ஜெயின் என்பவர் மும்பை பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து பிச்சை எடுப்பவர் உலகின் பணக்கார பிச்சைக்காரராக வலம் வருகிறார்.
54 வயதாகும் பாரத் ஜெயின் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுப்பதை தனது வேலையாக செய்து இன்று ரூ.7.5 கோடி சொத்து வைத்துள்ளார்.
இந்தியாவின் முக்கியமான இரு இடங்கள் மும்பை மற்றும் டெல்லி. இதில் மும்பையில் மிகவும் முக்கியமான இடங்களில் பிச்சை எடுப்பவர்தான் பாரத் ஜெயின். எப்போதும் பரபரப்பாக இருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் மற்றும் ஆசாத் மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜெயின் பிச்சை எடுக்கிறார். 10-12 மணி நேரம் இடைவேளையின்றி ‘வேலை’ செய்து ஒரு நாளைக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிச்சை எடுப்பதன் மூலம் அவருக்கு மாத வருமானம் ரூ.60,000 முதல் ரூ.75,000.
40 ஆண்டுகளாக மொத்தம் 7.5கோடி சம்பாதித்து வைத்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் ஜெயின். ரூ.1.4 கோடி மதிப்புள்ள 2 BHK பிளாட் வைத்துள்ள அவர் அங்கு தனது மனைவி, இரண்டு மகன்கள், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். தானேயில் இரண்டு கடைகளை வைத்துள்ள அவர் மாத வாடகையாக ரூ.30,000 சம்பாதிக்கிறார்.
மேலும் இவரது குடும்பத்திற்கு ஒரு ஸ்டேஷ்னரி கடையும் உள்ளதாம். அதன்மூலம் வருமானம் வருகிறது. இவரது மகன்கள் பெரிய கான்வென்ட் பள்ளியில் படித்தவர்கள் என்பதால், அனைத்துத் தொழில்களையும் சிறப்பாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.
மேலும் இவருக்கு கிடைக்ககூடிய பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் நன்கொடை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவரது குடும்பம் இவர் பிச்சை எடுப்பதை எதிர்த்தாலும், எந்த நேரத்திலும் இந்த தொழிலை மட்டும் விடமாட்டேன் என்று கூறுகிறார் ஜெயின்.
மும்பையில் இதுபோன்ற பணக்காரப் பிச்சைக்காரர்கள் அதிகம். 2019 இல் ரயில் விபத்தில் இறந்த பிச்சைக்காரரான புர்ஜு சந்திர ஆசாத், ரூ. 8.77 லட்சம் பிக்சட் டெபாசிட் மற்றும் சுமார் ரூ.1.5 லட்சம் ரொக்கமாக வைத்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.