

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் மின்சார வாகனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் மின்சார வாகனங்களுக்கான மோட்டார் வாகன சாலை வரி விலக்கை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தொழில்துறையில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் மின்சார வாகனங்களின் வளர்ச்சி 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு தற்போது 100% சாலை வரிச் சலுகையை வருகின்ற 2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
சாலை வரிச் சலுகை தமிழ்நாட்டில் இன்றுடன் (2025 டிசம்பர் 31) முடிவடைய உள்ள நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது, மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரிச் சலுகையானது, மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி வரையறுக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத தனிநபர் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.
போக்குவரத்து ஆணையர் மற்றும் மின்சார வாகன உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சார்ஜ் சென்டர்களை அமைப்பதிலும் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பெரும்பாலான இருசக்கர மின்சார வாகனங்களுக்கு வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ள இயலும். ஆனால் கார் மற்றும் பேருந்து போன்ற மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் சென்டர்கள் அவசியம் தேவை என்பதால், மத்திய, மாநில அரசுகள் சார்பில் சார்ஜ் சென்டர்கள் அமைக்க 100% மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
‘தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை-2023’ இன் படி, மின்சார வாகனப் பயன்பாடு மற்றும் உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நோக்கங்களை எட்டுவதற்கும், மின்சார வாகனங்களின் வளர்ச்சியைத் தக்க வைக்கவும் தமிழக அரசு 100% சாலை வரிச் சலுகையை நீட்டித்துள்ளது.
இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மின்சார வாகனங்களை வாங்குவோர் சாலை வரியைச் செலுத்துவதில் 100% விலக்கு பெறுவர். மேலும் விற்பனை விலையில் கணிசமான தொகை குறையும் என்பதால், மின்சார வாகனங்களின் உற்பத்தியை பெரிய அளவில் அதிகரிக்க முடியும் என்ற உறுதியை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளித்துள்ளது தமிழக அரசு.