

சாலைகளில் விபத்துகளைத் தடுக்க ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இந்த வேகத்தடைகளினால் தான் விபத்துகளே ஏற்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் வேகத்தடைகளின் மீது வெள்ளை நிற வண்ணங்களை தீட்டாதது தான்.
அவ்வகையில் சமீபத்தில் புதுக்கோட்டையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் எஸ்ஐ அதிகாரி, வேகத்தடை இருப்பதை அறியாமல் சென்ற போது விபத்துக்குள்ளாகி அதிகாரி உயிரிழந்தார்.
இது மட்டுமின்றி அவ்வப்போது இரவு நேரங்களில் வண்ணம் தீட்டப்படாத இந்த வேகத்தடையால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் ஊர் காவல் படையைச் சேர்ந்த பெண் ஒருவரும் இது குறித்து மேலதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் யாரும் இதற்கு செவி சாய்க்காத நிலையில் தானே களத்தில் இறங்கியுள்ளார் அந்த ஊர்க்காவல் படை பெண்.
புதுக்கோட்டையில் மருத்துவமனை, நீதிமன்றம் புதிய மற்றும் பழைய பேருந்து ஆகியவை ஒன்றிணையும் ஒரு முக்கிய சாலையில் உள்ள வேகத்தடையில் வண்ணம் தீட்டப்படாததால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துக்களை தடுக்கும் விதமாக தற்போது ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் ஒருவர், இரவு நேரத்தில் வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் தீட்டி உள்ளார். இவரது இந்த சமூக அக்கறையைப் ஊக்குவிக்கும் விதமாக, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த அந்த பெண்ணிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊர்க்காவல் படை பெண் கூறுகையில், “இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இங்கு வேகத்தடை இருப்பதே தெரியவில்லை. இங்கு வேகத்தடை மட்டுமே இருக்கிறது; ஆனால் வேகத்தடை மீது வண்ணம் பூசப்படவில்லை. இதன் காரணமாக ஏற்கனவே ஒரு பெண் எஸ்ஐ அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு விபத்துக்கள் நடந்துள்ளன.
இந்த விபத்துக்கள் தொடர்பான வீடியோக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் காட்டி, நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை தெரிவித்தேன். ஆனால் யாரும் இதற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது நானே இரவு நேரத்தில் தனியாக இங்கு வந்து வெள்ளை வண்ணம் தீட்டியுள்ளேன். இங்கு மட்டுமின்றி மேலும் இரண்டு வேகத் தடைகளுக்கும் வெள்ளை வண்ணத்தை தீட்டியுள்ளேன்.
பகல் பொழுதில் வாகனங்கள் அதிக அளவில் செல்லும் என்பதால், இரவு நேரத்தில் இந்தப் பணியை நான் மேற்கொண்டேன். இனி இந்த வேகத்தடையால் விபத்துகள் ஏற்படக்கூடாது என்பதே எனது எண்ணம்” என அவர் தெரிவித்துள்ளார்
இனி ஒரு விபத்து நடக்கக் கூடாது என்பதை முன்னிறுத்தி ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இந்த பெண்ணின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் வண்ண பூச்சுகள் தீட்டப்படாத வேகத் தடைகள் மீது விரைந்து வண்ணம் பூச, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.