ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!! இனி மேல் ரேஷன் கார்ட்டில் திருத்தம் செய்ய முடியாது..!
தமிழகத்தில் கடைக்கோடி மக்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறவும், பிற அரசு திட்டங்களில் பயனடையவும் ரேஷன் கார்டு மிக முக்கியமான அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முதியோர் ஓய்வூதியம் முதல் அனைத்து நலத்திட்டங்களுக்கும் ரேஷன் கார்டை வைத்தே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1000 ரூபாய் பெறுவதற்கு ரேஷன் கார்டே அடிப்படையான மிக முக்கியமான ஆவணமாகும்.
ரேஷன் அட்டை மூலம் மானிய விலையில் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற உதவுகிறது. அதேபோல் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் இலவச சேலை, வேட்டி மற்றும் பரிசுப் பொருட்களைப் பெறவும், பேரிடர் காலங்களில் அரசு வழங்கும் நிவாரணத்தொகையை பெறும் இந்த அட்டை மிகவும் அவசியமாகும்.
சுருக்கமாக, சொல்வதென்றால் ரேஷன் கார்டு என்பது ஒரு குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசின் உதவிகளைப் பெறுவதற்கும், பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைவதற்கும் ஒரு முக்கிய ஆவணமாகும்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், நியாய விலைக் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெண் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வாங்கலாம், இது மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
புதிய ரேஷன் கார்டு பெற விரும்புபவர்கள் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் ரேஷன் கார்ட்டை வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கவும், திருத்தங்களைச் செய்யவும் அரசு அனுமதிக்கிறது.
கார்டுதாரர்கள் தேவைக்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் மற்றும் வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை தான் தற்போது வரை உள்ளது. இதற்கிடையே மகளிர் உரிமைத் தொகையைப் பெறுவதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் என்பதால், புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்த்தல், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் உட்பட நான்கு சேவைகளுக்கும், ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் என வருடத்திற்கு இரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் ஆவணங்களை பதிவிறக்கவும் செய்ய முடியும் என்றும், உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ரேஷன் கார்டில் இந்த 4 சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்ளவும், சேவைகளை முறைப்படுத்தவும், ஆண்டுக்கு இருமுறை விண்ணப்பிக்க அனுமதி மற்றும் ஆவணம் பதிவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் என்பதால், மக்கள் அடிக்கடி திருத்தம் கோரி விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் அதிகளவு பணிச்சுமையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

