

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய உத்தரவின்படி, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளை (URL) புதிய .bank.in டொமைனுக்கு மாற்றத் தொடங்கியுள்ளன. இதன் பொருள், வாடிக்கையாளர்கள் இனி தங்கள் வங்கியின் ஆன்லைன் சேவைகளை அணுகும்போது, பாதுகாப்பான மற்றும் பிரத்யேகமான .bank.in முகவரியைப் பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில் சமீப காலமாகவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் மோசடிகளை எதிர்த்துப் போராட, ஆன்லைன் வங்கிச் சேவைகளில் வாடிக்கையாளர்களின் நிதித் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, வங்கிகளுக்கான பிரத்யேக இணைய டொமைன் '.bank.in' டொமைனை செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது.
இதைப் பற்றி பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதால் இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
* .bank.in டொமைன் என்பது அரசு அனுமதியுடன் வழங்கப்படும் பாதுகாப்பான டொமைனாகும். இது வாடிக்கையாளர்களை பிஷிங் (phising) மற்றும் போலி வலைத்தளங்கள் போன்ற மோசடிகளிலிருந்து பாதுக்காத்துக் கொள்ள உதவும். உதாரணமாக - www.abc.com என்பதற்கு பதிலாக www.abc.bank.in என்பதைப் பார்க்கும்பொழுது அது நம் வங்கிதான் என்ற பாதுகாப்பு உணர்வு மக்களிடையே உருவாகும்.
* இதன்மூலம் வாடிக்கையாளர்கள் போலியான வலைதளங்களை அடையாளம் காண முடியும். அத்துடன் இந்த டொமைன் கட்டுப்பாடு மூலம் மோசடி வலைத்தளங்களை தடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
* இந்த உத்தரவு முதற்கட்டமாக வணிக வங்கிகளுக்கு (commercial Banks) பொருந்தும் எனவும் பிறகு மற்ற நிதி நிறுவனங்களுக்கும் இந்த முறை செயல்படுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அந்த வகையில் டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் (Digital financial ecosystem) நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ் பாங்க் ஆஃப் பரோடா அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை (Bank of Baroda Official Website) புதிய டாட்.பேங்க்.இன் (.bank.in) டொமைனுக்கு மாற்றி உள்ளது.
அதேபோல் பல பொதுத்துறை வங்கிகளும் இந்த புதிய (.bank.in) டொமைனுக்கு மாறிவிட்டன அல்லது மாற்றும் பணியில் உள்ளன. எடுத்துக்காட்டாக:
பாரத ஸ்டேட் வங்கி (SBI): https://sbi.bank.in
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB): https://pnb.bank.in/
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank): https://www.icici.bank.in/
ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank): https://www.hdfc.bank.in/
ஆக்சிஸ் வங்கி (Axis Bank): https://www.axis.bank.in/
பாங்க் ஆஃப் பரோடா(Bank of Baroda) : https://bankofbaroda.bank.in
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் சேவைகளை அணுகுவதற்குப் புதுப்பிக்கப்பட்ட .bank.in வலைத்தள முகவரியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த நடவடிக்கை சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் டிஜிட்டல் வங்கி மற்றும் கட்டண முறைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, தடையற்ற மற்றும் நம்பகமான டிஜிட்டல் வங்கி அனுபவங்களை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை ரிசர்வ் வங்கி மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.