

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கியது. கடந்த 3 மாதங்களைக் கடந்தும் இந்தப் போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், உலக நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
போர் தொடங்குவதற்கு முன்னால் 70 டாலருக்கு கீழே இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 100 டாலருக்கும் மேல் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஈரான் செய்தி நிறுவனம் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், அடுத்த 30 நாட்களில் ஹார்மூஸ் நீரிணையின் நிலைமை சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் இதுவரை பெட்ரோல் விலை ரூ.7.2 மற்றும் டீசல் விலை ரூ.7.38 வரை உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் விரைவில் முடிவடையும் என்பதால், இன்று கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து ஒரு பேரல் 100 டாலருக்கும் கீழே சரிந்தது.
கச்சா எண்ணெய் குறைந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர ஈரானும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அடுத்த 30 நாட்களில் ஹார்மூஸ் நீரிணையின் நிலைமை சீராகும். ஹார்மூஸ் நீரிணையில் உள்ள அனைத்து தடைகளும் விலக்கப்படும். அதோடு வெளிநாடுகளில் முடக்கப்பட்ட சொத்துக்களும் விடுவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்து, அமைதி ஒப்பந்தம் கையத்தாகும் பட்சத்தில், ஹார்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் தங்கு தடையின்றி செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
இது நடந்தால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு முடிவுக்கு வரும். அதோடு எல்பிஜி கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட எரிபொருள்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரத்தில் இந்தியாவில் 4 முறை பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த மாதமே வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அமெரிக்கா ஈரான் போர் தொடரும் பட்சத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் உயர்த்தப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
ரஇருப்பினும் ஈரான் தற்போது உலக நாடுகளுக்கு நற்செய்தியை அறிவித்திருப்பதால், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.