

நாட்டில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு லட்சக்கணக்காண பட்டதாரி இளைஞர்கள், அயராது முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதன்படி Group B மற்றும் Group C பிரிவில் சுமார் 12,256 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது Staff Selection Commission (SSC).
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இநஅநிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மத்திய அரசின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பதால், இளைஞர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 12,256 (தோராயமாக).
பணி விவரங்கள்: பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் உதவியாளர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். Junior Statistical Officer (JSO) வேலைக்கு மட்டும் 12-ம் வகுப்பில் கணிதப் பாடத்தில் 60% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இல்லையெனில் பட்டப்படிப்பில் புள்ளி விவரவியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பதவிகளைப் பொறுத்து வயது வரம்பு வேறுபடும். இருப்பினும் 18 முதல் 32 வயதுக்குள் இருத்தல் வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓபிசி மற்றும் EWS பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
கணினி வழியாக 2 நிலைகளாக ஆன்லைன் தேர்வு நடைபெறும். எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு முதல் Sectional Timing அறிமுகமாக உள்ளது. இதன்படி ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு நேரம் ஒதுக்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
சம்பள விவரம்: ரூ.25,500 - ரூ.1,51,100 (பணியைப் பொறுத்து சம்பள விகிதம் மாறுபடும்.)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் தொடங்கும் தேதி - 21.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.06.2026 (இரவு 11 மணி வரை)
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி தேதி 23.06.2026 (இரவு 11 மணி வரை)
திருத்தங்கள் மேற்கொள்ள 29.05.2026 முதல் 01.07.2026 (இரவு 11 மணி வரை)
முதல்நிலை கணினி வழித் தேர்வு - ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடலபெறும்.
இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு - டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், 1800 309 9063 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
1. முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://ssc.gov.in/) செல்ல வேண்டும்.
2. இதுதான் உங்களுக்கு முதன்முறை என்றால் One-Time Registration (OTR) செய்ய வேண்டும். ஏற்கனவே OTR செய்திருந்தால், நேரடியாக உங்கள் கணக்கில் உள்நுழையலாம்.
3. வெற்றிகரமாக உள்நுழைந்தவுடன் ‘SSC CGL 2026’ என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
4. அதன்பிறகு புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, சமர்ப்பிக்கவும்.
5. இறுதியாக குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
6. விண்ணப்பத்தில் ஏதேனும் தவறாக பதிவிட்டிருந்தால், அதனைத் திருத்த ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் உங்கள் விண்ணப்பத்தைத் திருத்திக் கொள்ளலாம்.