அழிவின் விளிம்பில் 80% ஆறுகள்..! தண்ணீருக்குள் காத்திருக்கும் பேராபத்து.!

Danger zone for World Rivers
Oxygen
Updated on

இயற்கையின் முக்கிய அம்சமான நீர்நிலைகள் தற்போது மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஆக்சிஜனின் அளவு குறைந்து வருவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி உலகளவில் கிட்டத்தட்ட 78.8% ஆறுகள், ஆக்ஸிஜனை இழந்து வருகின்றன என சீன விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால், இந்த நூற்றாண்டு (2100) முடிவதற்குள், ஆறுகள் இழக்கும் ஆக்சிஜன் அளவு 4 முதல் 10 சதவீதத்தை எட்டிவிடும்.

இது நடந்தால் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் மடிந்து விடும். இதனைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நான்ஜிங் புவியியல் மற்றும் ஏரியியல் நிறுவனத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானியான கி குவான் மற்றும் பேராசிரியர் குன் ஷி தலைமையிலான குழுவினர் நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவுகளை சீன அறிவியல் அகாடமி வெளியிட்டது. 1985 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் உலகெங்கிலும் உள்ள 21,439 ஆற்றுப் படுகைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த ஆய்விற்கு செயற்கைக்கோள் படங்களும் ஏஐ தொழில்நுட்பமும் பெரிதும் உதவியாக இருந்தன.

ஆக்ஸிஜன் குறைவுக்கு காரணம் என்ன?

ஒவ்வொரு ஆறும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு லிட்டருக்கு 0.045 மி.கி. என்ற அளவில் ஆக்ஸிஜனை இழந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஆக்ஸிஜன் இழப்பு தற்போது 2.1%-ஐ எட்டியுள்ளது. இந்த மாற்றததிற்கு மிக முக்கிய காரணமே மனிதர்களின் செயற்கை மோகம் தான்.

செயற்கையை விரும்பி இயற்கையைக் காக்கத் தவறியதன் விளைவாகவே, தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல், கடுமையான வெப்ப அலைகள் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சிதை மாற்றங்களினாலும் ஆறுகளில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

குளிர்ந்த நீரைக் காட்டிலும், வெப்ப நீர் ஆக்ஸிஜனை விரைவாக வெளியேற்றி விடும். துருவப் பகுதி ஆறுகளில் தான் ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறைந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்தனர். ஆனால் இந்த கணிப்பிற்கு மாறாக வெப்ப மண்டல ஆறுகளில் தான் அதிக அளவிலான ஆக்சிஜன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, கங்கை ஆற்றில் உலக சராசரியை காட்டிலும் 20 மடங்கு வேகத்தில் ஆக்ஸிஜன் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

ஆசியாவில் உள்ள வெப்பமண்டல ஆறுகள், தென்னமெரிக்காவில் உள்ள அமேசான் ஆறு மற்றும் அமெரிக்காவில் உள்ள கிழக்குப் பகுதி ஆறுகள் தான் ஆக்ஸிஜன் இழப்புப் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன. இங்கு வெப்பமான சூழல் நிலவுவதால் ஆக்சிஜன் மிக எளிதாக கரைந்து விடுகிறது.

இதையும் படியுங்கள்:
மின்சார புகார்களை தீர்க்க இலவச கால் சென்டர்.! TNEB-ன் அதிரடி அறிவிப்பு.!
Danger zone for World Rivers

பாதிப்புகள்:

நீரில் உள்ள ஆக்ஸிஜன் லிட்டருக்கு 0.1 மி.கி. என்ற அளவில் குறைந்தால், அது நீரில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்தாக முடிந்து விடும். ஆக்ஸிஜன் சுத்தமாக இல்லாத நிலை உருவாகும் பட்சத்தில், நீர்நிலைகளில் வாழும் மீன்கள் ஒட்டுமொத்தமாக மடிந்து விடும்.

ஆக்ஸிஜன் குறைந்தால் வண்டல் மண்ணிலிருந்து நச்சு உலோகங்கள் நீரில் கலந்து, ஆபத்தை விளைவிக்கும். அதோடு பசுமை இல்ல வாயுக்களும் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும். இது ஒட்டுமொத்த உலகிற்கும் பேராபத்தை விளைவித்து விடும்.

புவி வெப்பமடைதலும், கார்பன் உமிழ்வும் தற்போதைய வேகத்திலேயே தொடர்ந்தால் 2100-க்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்சிஜன் அளவு 4% முதல் 10% குறைந்து விடும்.

இந்த பேராபத்திலிருந்து உலகைக் காக்க, உலக நாடுகள் ஒன்றிணைந்து நீர்நிலைகளை பாதுகாக்கும் திட்டங்களை விரைவாக வகுக்க வேண்டியது அவசியம் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
டாக்டர் ஆக ஆசையா.? நுழைவுத்தேர்வு இல்லை! – இந்த மருத்துவப் படிப்புக்கு உடனே விண்ணப்பீங்க.!
Danger zone for World Rivers
logo
Kalki Online
kalkionline.com