

இந்தியாவில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் கூட்டுறவுத் துறையின் மூலம் ரேஷன் கடைகள் வாயிலாக, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தற்போதைய நிலவரப்படி சுமார் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அரசின் மற்ற திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒன்றாக வழங்கப்படுமென மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றை பயனாளிகள் ஏப்ரல் மாதத்திலேயே ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரேஷன் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. ஜூன் மாதம் வரையிலான உணவு தானியங்களை(கோதுமை மற்றும் அரிசி) மத்திய அரசிடம் இருந்து முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் மத்திய அரசு புதிய கோதுமையை கொள்முதல் செய்ய உள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் புதிய தானியங்களை சேமித்து வைக்க இடவசதி தேவைப்படுவதால், பழைய இருப்பை மாநில அரசுகளுக்கு முன்கூட்டியே வழங்கி காலி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கோடைக்காலத்தில் நிலவக்கூடிய கடும் வெப்ப அலைகளின் போது பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்கவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, வரும் மார்ச் 25-ம் தேதிக்குள் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் தங்களின் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களால் கைவிரல் ரேகை பதிவு செய்ய முடியவில்லை என்றால், உங்களின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி நீக்கப்பட்டால் மீண்டும் நீங்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும். மேலும் தேர்தல் முடியும் வரை ரேஷன் கார்டு தொடர்பான குறைத்தீர்ப்பு முகாம்களும் நடத்தப்படாது என்பதால் பொதுமக்கள் ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், காலவகாசம் நீட்டிப்பு வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராத வரை மார்ச் 25 என்பதே கடைசி நாள் என்பதை மறக்க வேண்டாம்.