

ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயரை சேர்த்தால் எவ்வளவு அரிசி, சர்க்கரை கூடுதலாக கிடைக்கும், ரேஷன் அட்டையின் நிலையையும் சரிபார்க்க மத்தியஅரசு அறிமுகப்படுத்தியுள்ள உமாங் செயலி குறித்தும் அறிந்து கொள்ளலாம் வாங்க...
ரேஷன் கார்டு என்பது மாநில அரசுகளால் மக்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் ஒரு அட்டையாகும். அந்த வகையில் பொதுமக்களுக்கு கூட்டுறவுத் துறையின் மூலம் ரேஷன் கடைகள் வாயிலாக, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தற்போதைய நிலவரப்படி சுமார் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அரசின் மற்ற திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம். மத்திய அரசின் உதவிகள் மட்டுமல்லாமல், மாநில அரசின் பல்வேறு உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கார்டு இருக்கும் பயனாளிகளுக்கே பொங்கல் பரிசுத் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டில் தொடர்ந்து உதவி பெறுவதற்கு கேஒய்சி சரிபார்ப்பு மிகவும் அவசியம்.
அதுமட்டும் இல்லாமல் ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது. இதனாலேயே பலரும் புதிய ரேஷன் கார்டு வாங்கவும், குடும்பத்தில் விடுபட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்க்கவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வாயிலாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் கொடுக்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது.
அதேபோல் புதிதாக திருமணமான தம்பதியர் ரேஷன் கார்டு விண்ணப்பித்து வாங்கும்பட்சத்தில் கணவன், மனைவிக்கு என்ற அடிப்படையில் பொருட்கள் கொடுக்கப்படும். ஒருவேளை குழந்தை பிறந்தால், புதிய உறுப்பினராக குழந்தையின் பெயரை விண்ணப்பித்து குழந்தையின் பெயர் ரேஷன் கார்டில் சேர்க்கப்பட்டால், மாதந்தோறும் கூடுதலாக 2 கிலோ அரிசியும் 500 கிராம் சர்க்கரையும் கொடுப்பார்கள்.
தற்போது ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக விரைவாக குடும்ப உறுப்பினர்களின் பெயரை ரேஷன் கார்டில் சேர்த்துக் கொள்ள முடியும்.
உங்கள் குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க tnpds இணைதளத்திற்கு சென்று புதிய உறுப்பினர் பெயரை சேர்க்க என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்கள் ரேஷன் கார்டில் கொடுத்துள்ள மொபைல் எண்ணை உள்ளிடவும். பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு லாகின் செய்து உங்கள் குழந்தையின் பெயரை பிழையில்லாமல் சரியாக டைப் செய்யவும். பின்னர் உங்கள் குழந்தையின் ஆதார் கார்டு எண்ணை உள்ளிடவுடன் ஒரு ஓடிபி வரும். அதனை உள்ளிட்டால் உங்களின் கோரிக்கை சமர்பிக்கப்படும். ஒரு வாரம் முதல் 2 வாரங்களுக்குள் குழந்தையின் பெயர் உங்கள் ரேஷன் கார்டில் சேர்க்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கிடையே, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இனிமேல் ரேஷன் அட்டை தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் அரசு அலுவலகங்களுக்கோ அல்லது ரேஷன் கடைகளுக்கோ செல்வதற்குப் பதிலாக, உமாங் செயலி மூலம் உங்கள் மொபைல் போனிலேயே ரேஷன் சேவைகளைப் பெறலாம்.
பல்வேறு மத்திய அரசு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் உமாங் செயலி, இப்போது 'மேரா ரேஷன்' என்ற ஒரு சிறப்பு அம்சத்தைச் சேர்த்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், நீங்கள் ஒரு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பது மட்டுமல்லாமல், உங்கள் ரேஷன் அட்டையின் நிலையையும் சரிபார்க்கலாம்.
அதாவது, இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு எவ்வளவு ரேஷன் கிடைக்கிறது, கடந்த சில மாதங்களாக நீங்கள் செய்த ரேஷன் பரிவர்த்தனை விவரங்கள், அரசாங்கத்தால் உங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது போன்ற முழுமையான விவரங்களை இப்போது உங்கள் ஸ்மார்ட்போனிலேயே தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் ரேஷன் அட்டை எண் இல்லாவிட்டாலும், நீங்கள் உள்நுழைந்து ஆதார் எண் மூலம் விவரங்களைப் பெறலாம்.
இந்தச் சேவையை பெற உங்கள் போனில் உமாங் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு நுழைந்த பிறகு, பாதுகாப்பிற்காக நான்கு இலக்க MPIN எண்ணை அமைக்க வேண்டும். அடுத்து செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள தேடல் பெட்டியில் 'Mera Ration' என்று டைப் செய்தால், ரேஷன் அட்டை சேவைகள் தெரியும். அதில், உங்கள் ரேஷன் அட்டை எண்ணை உள்ளிட்டு, ஒரே கிளிக்கில் அனைத்து விவரங்களையும் பெறலாம்.
இந்த வசதியை உடனடியாகப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்..