

தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பெரும்பாலான மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப்பில் அவ்வபோது புதுப்புது அப்டேட்டுகளை கொண்டு வருகிறது தாய் நிறுவனமான மெட்டா. இதன்படி இனி மொபைல் நம்பர் இல்லாமலேயே பயனர் பெயரை (User Name) வைத்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த புதிய வசதியை கொண்டு வரவுள்ளது மெட்டா நிறுவனம்.
தனிநபர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்தப் புதிய வசதி கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பொதுவாக வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டுமெனில், மொபைல் நம்பரை உள்ளிட்டு ஓடிபி சரிபார்ப்பு மூலம் உள்நுழைய வேண்டும். ஆனால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்டாலே போதுமானது. இந்நிலையில் இதே நடைமுறையை வாட்ஸ்அப்பிலும் கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி வருகின்ற ஜூன் மாதத்திற்குள் வாட்ஸ்அப்பை மொபைல் நம்பர் இல்லாமல் பயன்படுத்த முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்கள் பார்க்கும்போது, இனி மொபைல் எண் தெரியாது.
மாறாக அவர்களின் பயனர் பெயர் மட்டுமே தெரியும். இதன் மூலம் தனியுரிமை பாதுகாப்பு வசதியை அதிகப்படுத்துவதோடு, தேவையற்ற மோசடி மெசேஜ்களையும் தவிர்க்க முடியும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமெனில், அவருடைய போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த புதிய அப்டேட்டிற்குப் பிறகு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் போலவே ஒரு தனித்துவமான @username மூலம் ஒருவரைத் தேடிப்பிடித்து மெசேஜ் அனுப்பலாம்.
இதனால் அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்கள் மொபைல் எண்ணை பகிர வேண்டிய அவசியம் இருக்காது
தனிநபர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, பயனர் பெயருடன் சேர்த்து 4 இலக்க பின் வசதியையும் மெட்டா நிறுவனம் சோதித்து வருகிறது.
உங்கள் பயனர் பெயர் தெரிந்தாலும், இந்த பின் நம்பர் தெரிந்தால் மட்டுமே புதியவர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இது குறிப்பாக ஸ்பேம் மெசேஜ்களைத் தடுக்க பெரிதும் உதவும்.
இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வது, அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. முன்பு இருந்ததைப் போல் போன் நம்பர் மூலமே தொடர்புகொள்ள விரும்புபவர்கள் அப்படியே கூட தொடரலாம்.
மேலும் ஏற்கனவே உங்கள் போன் நம்பரை வைத்திருப்பவர்களுக்கு, அது தொடர்ந்து தெரியும். புதிய நபர்களுக்கு மட்டும் போன் நம்பரை மறைக்க இது உதவும்.