தாய்மார்களே கவனிங்க.! 3-வது பிரசவ விடுப்பில் அரசை அதிரவைத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு.!

Chennai High court
Pregnant Women
Updated on

மகப்பேறு காலத்தின் போது பணியில் இருக்கும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாத காலமாக இருக்கிறது. ஆனால் அரசு வேலையில் இருக்கும் பெண்களுக்கு, 2 குழந்தைகள் வரை மகப்பேறு விடுப்பு ஓராண்டு காலமாக உள்ளது.

தமிழக அரசின் அரசாணைப் படி, மூன்றாவது குழந்தைக்கு 12 வாரம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். இந்நிலையில் 3-வது குழந்தைக்கும் ஓராண்டு கால மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திண்டிவனம் மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் பணிபுரியும் சாயி நிஷா, மூன்றாவது குழந்தை பிறந்து மகப்பேறு விடுப்பில் இருந்துள்ளார். தமிழக அரசாணையின் படி இவருக்கு 12 வார மகப்பேறு விடுப்பு மட்டுமே அளிக்கப்பட்டது.

ஆனால் தனக்கு ஓராண்டு கால மகப்பேறு விடுப்பு வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவரது மனுவை ஆராய்ந்த மாவட்ட நீதிமன்றம் அரசாணையின் படி, 12 வார மகப்பேறு விடுப்பு மட்டுமே அளிக்கப்படும் எனவும், ஏப்ரல் மாதத்திற்குள் பணியில் சேர வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சாயி நிஷா மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் மூன்றாவது குழந்தைக்கு 12 வார மகப்பேறு விடுப்பு அளிக்கும் தமிழக அரசின் அரசாணையை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.

மேலும், முதல் இரண்டு பிரசவத்தின் போது அனுபவிக்கும் வலியைத் தான் மூன்றாவது பிரசவத்தின் போதும் பெண்கள் அனுபவிக்கிறார்கள். ஆகவே ஓராண்டு மகப்பேறு விடுப்பு அளிப்பது தான் நியாயம் என மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இளநீர் குடிக்கணும்னா இனி யோசிக்கனும் போல.. கிடுகிடுவென உயர்ந்த விலை..!!
Chennai High court

அரசின் ஓராண்டு மகப்பேறு விடுப்பு என்ற சலுகை, பச்சிளங் குழந்தைகளின் வளர்ச்சியை உறுதி செய்யவே உருவாக்கப்பட்டது. ஆனால் எத்தனையாவது குழந்தை என்ற கட்டுப்பாட்டை விதிப்பது இதில் சட்டப்படி செல்லாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், தமிழக அரசாணையில் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அரசு பணியில் உள்ள பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு உரிமையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! இனி சைக்கிள் விலையில் இ-பைக் கிடைக்கும்.!
Chennai High court
logo
Kalki Online
kalkionline.com