

பிறப்புச் சான்றிதழ் என்பது நகராட்சியால் வழங்கப்படும் முதல் ஆவணமாகும். இது பாஸ்போர்ட், உரிமம், பள்ளியில் சேருதல், திருமணம், தத்தெடுப்பு அல்லது பெயர் மாற்றம் போன்ற பல ஆவணங்களைப் பெறுவதற்குத் தேவையான ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். எனவே, பிறப்புச் சான்றிதழில் உள்ள அனைத்துப் பணிகளும் எந்தவித இடையூறும் இல்லாமல் சீராகச் செயல்படுவதை உறுதிசெய்ய, துல்லியமான தகவல்களுடன் அதைப் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு நபரின் பிறப்பு விவரங்களை வரையறுக்கும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்தியாவில், பிறப்புச் சான்றிதழ் பிறந்த இடத்தைப் பொறுத்து நகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்தால் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒரு நபர் ஏதேனும் காரணத்திற்காக பிறப்புச் சான்றிதழில் தனது பெயரை மாற்ற விரும்பினால், சில சட்ட விதிகள் மற்றும் தேவைகள் பின்பற்றப்பட வேண்டும்.
ஒருவருடைய பிறப்புச் சான்றிதழில் பெயரை மாற்ற முடியும், ஆனால் இதற்குச் சரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்; எழுத்துப் பிழைகள் போன்ற சிறிய திருத்தங்கள் எளிதாகச் செய்யப்படலாம்.
இதற்கு பிறப்பு சான்றிதழில் பிழையை திருத்த வேண்டும் என்று ஒரு மனுவை விஏஓ அல்லது சுகாதார ஆய்வாளரை அணுக வேண்டும். குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து தந்தால் அவற்றை சரிபார்த்து, பிழையையும் திருத்தி தருவார்கள்.
எழுத்துப் பிழை (Spelling mistake) போன்ற சிறிய திருத்தங்களுக்கு, அரசிதழ் அறிவிப்பு இல்லாமல், பிரமாணப் பத்திரம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் பதிவாளரிடம் நேரடியாக விண்ணப்பித்துச் சரிசெய்யலாம். ஆனால் முழுப் பெயரை மாற்றுவதற்கு அரசிதழில் (Gazette) பெயர் மாற்றம் செய்து, அதற்கான ஆவணங்களுடன் பிறப்பு பதிவாளரிடம் விண்ணப்பித்து பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றிய பிறகு, ஆதார் அட்டை, பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற பிற முக்கிய ஆவணங்களிலும் புதிய பெயரைக் கொண்டு வர வேண்டும்
பிறப்புச் சான்றிதழில் பெயர்களை எவ்வாறு மாற்றுவது , சட்ட நடைமுறைகள், தேவையான ஆவணங்கள், தகுதி மற்றும் www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க....
பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். ஆனால் விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால் (குழந்தை என்றால்) தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அதற்கான நகலையும்(Legal Guardianship Order), கையொப்பத்தின் கீழ் உறவின் முறையை (Capital Letter-ல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
பெயர் மாற்றத்திற்கான ரூ.750 கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தின் மூலமாகவும், வங்கியில் Online / Offline மூலமாகவும் செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச்சீட்டினை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவு பெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
அதேபோல் மாற்றம் செய்யப்பட்ட புதிய பெயரில், "என்கிற" (Alias) என்று பிரசுரிக்க இயலாது. பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதத்திற்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்வித கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டாது.
பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, மனுதாரர் சுய சான்றொப்பம் இடவேண்டும். அரசிதழை நேரில்பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
பெயர் மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள்
பெயர் மாற்றத்திற்கான பிரமாணப் பத்திரம்
பழைய பிறப்பு சான்றிதழ் நகல்
கல்வி சான்றிதழ் நகல்
சாதி சான்றிதழ் நகல்
ரேஷன் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் அட்டை நகல்
பாஸ்போர்ட்