

தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், டிக்கெட் புக்கிங் முதல் அரசு சேவைகள் உட்பட அனைத்தும் விரைவாக கிடைக்கின்றன. அவ்வகையில் தற்போது வாட்ஸ்அப் செயலி மூலமாக பிறப்பு, இறப்பு மற்றும் வருவாய் துறை சான்றிதழ்களை பெற தமிழக அரசு புதிய வசதி ஒன்றை செயல்படுத்தியுள்ளது.
உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
இதன் காரணமாக வாட்ஸ்அப் செயலியின் மூலம் அரசு சேவைகளை வழங்கிட கடந்த சில மாதங்களாக தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது. இதன் பலனாக தற்போது வாட்ஸ்அப் செயலியில் அரசு சேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து பிறப்பு, இறப்பு மற்றும் வருவாய் துறை சான்றிதழ்கள் உட்பட 50 சேவைகளை வழங்கவுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இனி வாட்ஸ்அப் செயலி மூலமாகவே அரசு சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு முன்பு வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டும் எனில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளை தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
வருவாய் துறை சான்றிதழ்கள் உட்பட 50 சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகளிடையே ஒப்பந்தமானது. இந்த ஒப்பந்தத்தின் போது தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் சாதி மற்றும் வருமானம் உள்ளிட்ட தமிழக அரசின் வருவாய் துறை சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்கள் அனைவரும் தங்கள் மொபைல் போனில் சேமித்துக் கொள்ளுங்கள்.
தமிழக அரசின் இந்த புதிய வசதி குறித்து META நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். அதோடு கால தாமதமின்றி விரைவிலேயே சான்றிதழ்கள் கிடைப்பது தான் இதன் முக்கிய நோக்கம். இதன்படி 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு எந்த சான்றிதழ் தேவை என்பதை குறுந்தகவல் அனுப்ப வேண்டும். மேலும் சான்றிதழ் தொடர்பான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொதுமக்கள் குறுந்தகவல் அனுப்பிய ஒரு சில நாட்களில் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் வழியாக அரசு சான்றிதழ்களை பெறும் நடைமுறை, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதமே தொடங்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இனி அரசு சான்றிதழ்கள் வேண்டி பொதுமக்கள் யாரும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வாட்ஸ்அப் செயலியில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேலான சான்றிதழ்கள் ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் அட்டை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளும் விரைவில் இந்த வாட்ஸ்அப் செயலில் இணைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.