‘பாஜகவுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை’ வானதி சீனிவாசன் அறிக்கை!

Vanathi Srinivasan
Vanathi Srinivasan

‘சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு எதிராக ஒரு கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இதனால்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை’ என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்து இருக்கிறார்.

இன்று அவர் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில், 'நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. எதிரிகளே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தவிர, யாரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்ததில்லை. நேருவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் பிரதமர் மோடி.

பாஜக மட்டும் தனித்துப் பெற்றிருப்பது 240 இடங்கள். இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பெற்றிருப்பது 234 இடங்கள். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெற்ற 29, ஆம் ஆத்மி கட்சி பெற்ற 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற 2 என 35 இடங்கள் காங்கிரஸை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற இடங்கள். இண்டியா கூட்டணிக்கு உண்மையிலேயே மக்கள் அளித்த தீர்ப்பு 199 இடங்கள் மட்டுமே. ஆனால், ஏதோ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடித்து விட்டது போலவும், தாங்கள் ஆட்சி அமைத்து விட்டது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியால், பாஜக பெற்ற இடங்களில் பாதியைக் கூட பெற முடியவில்லை. காங்கிரஸ் அமைத்த இண்டியா கூட்டணி பெற்ற மொத்த இடங்களை விடவும், பாஜக தனித்து பெற்ற இடங்கள் அதிகம். பெரும்பான்மையை நெருங்க முடியாத அளவுக்கு தோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதை கொண்டாட வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அமைப்புசாரா தொழிலாளர் நலத்திட்ட உதவித் தொகையை 15 நாட்களில் வழங்க அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல்!
Vanathi Srinivasan

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கலாம். தேர்தலுக்கு முன்பே பாஜக அமைத்த கூட்டணிக்கு, நரேந்திர மோடிதான் பிரதமர் என்று முன்னிறுத்திய கட்சிகளுக்கு, மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். எனவே, மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான், இந்திய மக்களின் தெளிவான, உறுதியான தீர்ப்பு.

சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு எதிராக ஒரு கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இதனால்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. மேற்கு வங்கம், கர்நாடகம், ஹரியானாவில் சிறு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சறுக்கலையும் பின்னடைவையும் பாஜக நிச்சயம் சரி செய்யும். பாஜகவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் கொண்டாடித் தீர்க்க வேண்டிய வெற்றி' என்று அவர் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com