
பெங்களூரு நகரின் இதயம் போன்ற பகுதியான விதானசவுதாவுக்கு எதிரே மிகவும் பிரபலமான கப்பன் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா கலாச்சார நடைப்பயணங்கள் மேற்கொள்வதற்கும், குடும்பத்துடன் குதுகளிக்க சிறந்த இடமாகவும் மற்றும் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கு சிறந்த இடமாகவும் பெயர் பெற்றது இந்த பசுமையான பூங்கா. இந்த பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், தற்போது எதிர்பாராத சர்ச்சையின் மையமாக மாறியுள்ளது கப்பன் பூங்கா. அதாவது இந்த பூங்காவில் இளம்பெண்கள், வாலிபர்களின் 'டேட்டிங்'க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது பிரபலமான டிக்கெட் தளமான புக் மை ஷோ (BookMyShow) நிறுவனம், பூங்காவிற்குள் ‘பிளைன்ட் டேட்டிங்’குக்கு (Blind Date) இளம் தலைமுறையினருக்கு அனுமதி வழங்கி, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய விளம்பரப்படுத்தியதற்காக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பிளைன்ட் டேட்டிங் என்பது இரண்டு அறிமுகமில்லாத நபர்கள், ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாமல் சந்திக்கும் ஒரு வகையான டேட்டிங் ஆகும். இது பொதுவாக டேட்டிங் செயலிகள் அல்லது நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும். ஒருவருக்கொருவர் முன்கூட்டியே தெரியாததால், சந்திப்பின் போது அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் மற்றும் என்ன பேசுவார்கள் என்பது ஒரு எதிர்பாராத அனுபவமாக இருக்கும்.
இந்த பிளைன்ட் டேட்டிங்கில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்ளும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் சந்தித்து உரையாடலாம் என்றும் இதற்கு ரூ.199 கட்டணத்தில் 2 மணிநேர டேட்டிங் ஸ்லாட்டை வழங்குகிறது இந்த நிறுவனம். ஆக்ஸ்ட் 2-ம்தேதி முதல் 31-ம்தேதி வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வாலிபரும், இளம்பெண்ணும் சந்தித்து பேசி கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ புக் மை ஷோ வலைத்தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தி உள்ளது.
புக்மைஷோவின் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 'பிளைன்ட் டேட்டிங்' நிகழ்வில் விவரங்களின்படி, ரூ.199, ரூ.399, ரூ.1299 முதல் ரூ.1499 வரை நுழைவு கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிளைன்ட் டேட்டிங் அமர்வும் மாலை 5 மணிக்குத் தொடங்கி இருவரும் சந்தித்து உரையாட 2 மணிநேரம் ஒதுக்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் உறுதியளிக்கிறது. பெங்களூருவின் புகழ்பெற்ற கப்பன் பூங்காவில் 'பிளைன்ட் டேட்டிங்' நிகழ்வுகள் தொடர்பாக புக்மைஷோவின் அறிவிப்பு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பையும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கப்பன் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் சங்கத்தினர் மற்றும் தோட்ட கலைத்துறையும் புக்மைஷோவின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த நிறுவனம் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
கப்பன் பூங்காவில் 'பிளைன்ட் டேட்டிங்' ஏற்பாடு செய்து கட்டணம் வசூலிப்பது தற்போது தான் தனது கவனத்திற்கு வந்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகாரை சமர்ப்பித்துள்ளதாகவும் கப்பன் பூங்காவை நிர்வகிக்கும் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் குசுமா கூறியுள்ளார்.
இதுகுறித்து தோட்ட கலைத்துறை நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் கூறுகையில், கப்பன் பூங்காவில் பிளைன்ட் டேட் நடத்துவதற்கு புக் மை ஷோ நிறுவனம் ஏற்பாடு செய்திருப்பது பற்றி தோட்ட கலைத்துறைக்கு தாமதமாக தான் தெரிய வந்தது என்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பொழுது போக்கு பகுதியை வர்த்தக பயன்பாட்டுக்கு உபயோகிக்க எந்த ஒரு நிறுவனத்திற்கும் அனுமதி கிடையாது என்றும் அவர் கூறினார். மேலும் கப்பன் பூங்காவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் முயற்சியின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்படும் என்றும் அவர் என்றார்.
பெங்களூரின் இயற்கையின் நுரையீரலாக அறியப்படும் கப்பன் பூங்கா, குழந்தைகள், மூத்த குடிமக்கள், காலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், கலாச்சாரக் குழுக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பொதுவான மற்றும் வழக்கமான இடமாகும். இதை கட்டண டேட்டிங் இடமாக மாற்றும் புக்மைஷோவின் யோசனை உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கப்பன் பூங்காவில் போட்டோ ஷூட் எடுக்க தடை விதித்துள்ள அரசு, குழந்தைக்கு பெயர் சூட்டுதல், ரீல்ஸ் வீடியோ எடுத்தல் உள்ளிட்டவற்றுக்காக கப்பன் பூங்காவை பயன்படுத்த கூடாது என்றும், அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில் BookMyShow பட்டியலை நீக்குமா அல்லது அறிக்கை வெளியிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.