காங்கோ நாட்டில் உள்ள ஒரு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் மாயமாகிவுள்ளனர்.
விமான விபத்து மற்றும் படகு விபத்து போன்றவை சாலை விபத்துகளைவிட மிகவும் கொடுமையானவை. ஏனெனில், சாலை விபத்துக்களின்போது நாம் விரைவாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிவிடலாம். ஆனால், விமான விபத்தும் படகு விபத்தும் அப்படியல்ல. அவர்களை மீட்பதென்பதே மிகவும் சிரமமாகிவிடும். இதன்பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகிவிடும். இதனால் இந்த இரண்டிற்கும் ஏராளமான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
அப்படியிருந்தும்கூட அவ்வப்போது விபத்துக்கள் நடக்கத்தான் செய்கின்றன.
கின்ஷாசாவின் தலைநகரின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
காங்கோ நாடு ஆறுகளால் சூழப்பட்டது என்பதால், கப்பல், படகு போக்குவரத்துதான் மிகவும் முதன்மையானது. தற்போது ஆற்றில் நெரிசல் மிகுந்த அந்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர் என்றும் 12க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விப்பத்துக்குள்ளான படகு ஃபிமி ஆற்றின் வழியே பயணம் செய்துக் கொண்டிருந்தது.
மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பகுதியின் ஆணையர் டேவிட் கலெம்பா பேசியதைப் பார்ப்போம். “படகில் அதிகளவிலான நபர்கள் ஏற்றப்பட்டிருந்ததே இந்த விபத்திற்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதுவரை சடலமாக 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 12க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.” என்று பேசினார்.
இந்த விபத்திற்கு காரணம் படகில் அதிக சுமை ஏற்றியதுதான் என்று கணித்துள்ளனர். இதற்குமுன்னர் அடிக்கடி அதிக சுமைகளை ஏற்றுவதற்கு எதிராக எச்சரித்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நீர் போக்குவரத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களை கடுமையாக தண்டிக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக சுமை காரணமாக, இங்கு அக்டோபர் மாதத்தில் ஒரு படகு கவிழ்ந்து 78 பேர் இறந்தனர். அதேபோல் ஜூன் மாதம் மற்றொரு படகு கவிழ்ந்து 80 பேர் பலியாகினர். இப்போது நடந்த படகு விபத்து நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.