

ஆந்திர மாநிலத்தில் திருமலை மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை குறைந்தபாடில்லை. ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க பாலாஜி கோவிலின் பயணத்தையும், சுவாமி தரிசனத்தையும் எளிதாக்கும் நோக்கில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசு, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில் 'மன மித்ரா' மூலம் புதிய டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பக்தர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி, ஏழுமலையானை தரிசிப்பதாற்கான டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும். இனிமேல், நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை; ஒரு சில நிமிடங்களில் உங்கள் டிக்கெட் உங்கள் கையில்.
பக்தர்கள் பலருக்கும் வாட்ஸ்-அப் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது தெரியவில்லை. வாங்க இப்போ அந்த நடைமுறையை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்-அப் செயலியில் முன்பதிவு செய்வது எப்படி?
திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்வது இப்போது எளிதானது. அதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
* முதலில், தேவஸ்தானத்தால் வழங்கப்பட்ட அதாவது மன மித்ராவின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை 9552300009 உங்கள் போனில் சேமித்துக்கொள்ளுங்கள். வாட்ஸ் அப்பில் இந்த எண்ணுக்குச் செல்லுங்கள்.
* அந்த எண்ணுக்கு நீங்கள் ஒரு 'ஹாய்' (Hi) என்று மெசேஜ் அனுப்புங்கள்.
* ஆங்கிலத்தில் தொடர விரும்பினால், 'EN' என்று டைப் செய்து அனுப்பவும். தெலுங்கு மொழி தெரிந்தவர்கள் அப்படியே தொடரலாம்.
* கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து 'கோவில் முன்பதிவு சேவைகள்' திரையில் தோன்றும். அதில் நீங்கள் விரும்பும் தரிசனத்தைத் தேர்வுசெய்யவும்.
* உங்களுக்கான டிக்கெட்டைப் பதிவுசெய்து, ஆன்லைன் வழியாகப் பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் இ- டிக்கெட் அனுப்பப்படும்
* கோவில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்த எளிய, டிஜிட்டல் முறை, பலரும் புக்கிங் செய்வதில் எதிர்கொண்ட சிரமங்களைத் தீர்த்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல், தாங்களே நேரடியாக வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்டைப் பெறலாம் என்பதால், திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்குத் தயாராகும் பக்தர்கள் மத்தியில் இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த டிஜிட்டல் முயற்சியை கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களை அதிகரிக்கவும், குறிப்பாக நேரில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருக்கும் சவால்களை தவிர்க்கவும் அரசு கொண்டுவந்துள்ளது. இனிமேல் திருப்பதிக்கு பாலாஜியை தரிசனம் செய்ய செல்பவர்கள் உங்கள் ஆன்மீகப் பயணத்தை எளிதாக திட்டமிடலாம்.