

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலில் தினந்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால், சாமி தரிசனம் செய்ய மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் அதிக அளவிலான பக்தர்கள் கூட்டத்தால் சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரத்தையும் கடந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மாதந்தோறும் ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு நடைபெறுவது வழக்கம். இதன்படி முன்பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம்.
இந்நிலையில் தினசரி முன்பதிவு டிக்கெட்டுகளையும் அறிமுகப்படுத்த திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி நாளை முதல் தினசரி முன்பதிவு டிக்கெட் சேவை சோதனை முயற்சியாக அடுத்த ஒரு மாதத்திற்கு அமலுக்கு வரவுள்ளது.
திருப்பதியில் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர, திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு திருப்பதியில் தரிசன நேரத்தை குறைக்கும் விதமாக செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சோதனை முயற்சிகள் செய்யப்பட்டன.
ஏஐ தொழில்நுட்பம் அமலுக்கு வந்து விட்டால், வெறும் 2 மணி நேரத்திலேயே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இருப்பினும் இதற்கான சோதனைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு முயற்சியாக தினசரி முன்பதிவு டிக்கெட் முறையை சோதனை முயற்சியாக கொண்டு வந்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்.
இதன்படி ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசன டிக்கெட்டுகளுக்கு, ஆன்லைன் முன்பதிவு வசதியை சோதனை முயற்சியாக அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் (ஜனவரி 9) அமலுக்கு வர இருக்கிறது. திருமலை கவுண்ட்டர்களில் வழங்கப்பட்டு வந்த 800 ஸ்ரீவாணி டிரஸ்ட் பிரேக் சாமி தரிசன டிக்கெட்டுகள், இனி ஆன்லைன் முன்பதிவு மூலம் வழங்கப்படும்.
தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தினசரி காலை 9 மணிக்கு தொடங்கி, மதியம் 2 மணி வரை நடைபெறும். டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மேல் சாமி தரிசனம் செய்யலாம். இந்த புதிய ஆன்லைன் முன்பதிவு முறை, அடுத்த ஒரு மாதத்திற்கு சோதனை முயற்சியாக அமலில் இருக்கும். பக்தர்களின் வரவேற்புக்குப் பிறகு, இந்த முறை முழுமையாக அமல்படுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.
ஒரு மாத காலம் அமலில் இருக்கப் போகும் ஆன்லைன் டிக்கெட் முன் பதிவு முறையில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு தரிசன நேரம் இறுதி செய்யப்பட உள்ளது. இனி சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்த்து, ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் முறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்னர் வெளியான 500 ஆன்லைன் தரிசன டிக்கெட் கோட்டாவுக்கு மேலாக, நாளை அறிமுகமாகும் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் முறையும் அமலில் இருக்கும்.