பெருமாளின் சொர்க்க வாசல் வழியாக வைகுண்ட ஏகாதசி திதி நாளில் செல்லும்போது, வெங்கடாஜலபதி அருளால் நேரடியாக சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என நம்பப்படுகிறது.
இதனாலேயே வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. 2024-ம் ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்காத நிலையில், ஜனவரி 2025-ம் ஆண்டு இரண்டு முறை சொர்க்கவாசல் திறப்பு நடக்க இருக்கிறது. அந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் இரண்டாவதாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்க உள்ளது.
திருமலையில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசி விழாவின் போது திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.
பொதுவாக வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே இந்த விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி 10 நாள் விழாவாக மாற்றப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஆகையால், ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை 10 நாட்கள் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும்.
10 நாட்களும் வைகுண்ட துவார தரிசனம் வழியாகச் சென்று சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும்.
ஜனவரி 9 முதல் 19-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 10-ந்தேதி தங்கத்தேரோட்டம், 11-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி நாளில் சாமி தரிசனம் அதிகாலை 4.45 மணிக்கு தொடங்குகிறது.
திருப்பதியில் திறக்கப்படும் சொர்க்கவாசல் விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் விழா ஏற்பாடுகளை இப்போதே தொடங்க அனைத்து துறையினருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in -ல் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கு திருப்பதியில் 8 மையங்களிலும், திருமலையில் ஒரு மையத்திலும் எஸ்.எஸ்.டி. (தேதி நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசனம்) டோக்கன்கள் நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள எம்.ஆர்.பள்ளி, ஜீவகோணா, ராமா நாயுடு பள்ளி, ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதானம், சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி வளாகம், கவுஸ்தூபம் ஓய்வு இல்லம் ஆகிய இடங்களில் டோக்கன்கள் நேரடியாக ஒதுக்கீடு செய்யப்படும்.
டோக்கன், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். டோக்கன்கள் இல்லாத பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் லட்டு பிரசாதத்துக்கு தினமும் 3.50 லட்சம் லட்டுகள் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3.50 லட்சம் லட்டுகளை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கைக்குழந்தை வைத்திருப்பவர்கள், முதியோர்கள் திருப்பதி செல்வதை தவிர்ப்பதே நல்லது.