

ஐந்து மாநிலங்களில் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் ஆணையம் தன் வேலையை தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் , தேர்தலில் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கவும் , மோசடிகள் ஏதேனும் நடைபெறாத வண்ணம் தடுக்கவும், ஒரு சில நடைமுறைகளை அவ்வப்போது மாற்றி அமைக்கின்றன.
தற்போது நடைபெற உள்ள 5 மாநிலத் தேர்தல்களில் , "வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லீப்பில் வழக்கமாக இடம்பெறும் வாக்காளரின் புகைப்படம் இந்த முறை இடம்பெறாது", என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி , வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முன்னர் வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் உள்ள குறிப்பிடத்தக்க வகையிலுள்ள முக்கிய அம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைப்படம் நீக்கம்:
வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளது என்பதற்கு சான்றாக பூத் ஸ்லீப் வழங்கப்படுகிறது. இதில் வாக்காளரின் பெயர் , புகைப்படம் , வயது , பாலினம் உள்ளிட்ட சில அடிப்படை தகவல்கள் இருக்கும். புதிய நடைமுறையின் படி, பூத் ஸ்லீப்பில் வாக்காளரின் புகைப்படம் அச்சிடப்படாது . இது வாக்காளரின் தனிப்பட்ட தரவுகளை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற தகவல்கள்: பூத் ஸ்லீப்பில் புகைப்படம் இல்லாவிட்டாலும் , வழக்கமாக இடம்பெறும் மற்ற தகவல்கள் அப்படியே இருக்கும். வாக்காளர் எந்தப் பாகத்தில் (Part Number) உள்ளார், அவரது வரிசை எண், வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடியின் பெயர் (Polling Station) மற்றும் அதன் முகவரி ஆகியவை
பூத் ஸ்லிப்பில் இடம்பெறும். மேலும் தேர்தல் நடைபெறும் நாள் , வாக்குப்பதிவு நடைபெறும் நேரம் போன்ற தகவல்கள் அதில் இருக்கும்.
பூத் ஸ்லிப் ஒரு அடையாள அட்டை அல்ல:
தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பில் முக்கியமாக கூற விரும்புவது என்னவென்றால் , பூத் ஸ்லிப் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை அல்ல. பூத் ஸ்லிப் இருந்தாலும் கட்டாயமாக வாக்காளர் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டையை எடுத்துச் செல்வது அவசியம். பூத் ஸ்லிப் வாக்காளர் தனது வாக்குச் சாவடியை எளிதில் கண்டறியவும் , வரிசை எண்ணை விரைவாக கண்டறிய பயன்படும் ஒரு தரவு சீட்டு மட்டுமே..
புகைப்படம் நீக்க காரணம் என்ன?
பூத் ஸ்லிப்பில் புகைப்படம் அச்சிடப்பட்ட போது, அதில் உள்ள புகைப்படங்கள் சிலருக்கு தெளிவற்றதாக இருந்தது. மேலும் பூத் ஸ்லிப்பை உள்ளூர் பிரமுகர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருவதால் , அதில் உள்ள தரவுகள் மூன்றாம் நபர் கையில் சிக்கி ஏதேனும் முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்காக , தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
பூத் ஸ்லிப்புடன் வாக்காளர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய அடையாள அட்டைகள்:
வாக்களிக்க செல்லும்போது நீங்கள் கட்டாயம் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் , ஒருவேளை உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற சில அடையாள அட்டைகளை காட்டி நீங்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும். அவை
1.ஆதார் அட்டை
2.பான் கார்ட்
3.பாஸ்போர்ட்
4.டிரைவிங் லைசென்ஸ்
5.புகைப்படத்துடன் கூடிய வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவை இதர அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.