
விமான நிலையத்தில் பொதுவாக யாராலும் அத்துமீறி நுழைய முடியாது. ஆனால் விமானத்தின் சக்கரத்தில் அமர்ந்து இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு சிறுவன் ஒருவன் வந்திருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சகட்ட பாதுகாப்புகளையும் மீறி 13 வயதே ஆன சிறுவன் விமான நிலையத்திற்குள் நுழைந்து, விமானச் சக்கரத்திலேயே பயணித்துள்ளான்.
இது பயணிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சதிச் செயல் ஏதும் நடைபெறாத நிலையில் அவனை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியது இந்தியா.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் விமான நிலையத்தில் இருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு கேஏஎம் விமானம் நேற்று மதியம் 1 மணியளவில் வந்தடைந்தது. விமானம் தரையிறங்கியதும் பயணிகளும் இறங்கி, டெல்லி விமான நிலையத்தைக் கடந்து சென்றனர். அப்போது யாரென்றே தெரியாத ஒரு சிறுவன் டெல்லி விமான நிலையத்தில் சுற்றித் திரிந்ததைப் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்துள்ளனர். உடனே சந்தேகத்தின் பேரில் அச்சிறுவனை அழைத்து விசாரித்ததில், அவன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவன் என்பது உறுதியானது.
பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிறுவனை விசாரணை செய்ததில் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது; அதனால் தான் விமானத்தில் ஏறினேன் என சிறுவன் கூறியுள்ளான். இதற்காகவே காபூல் விமான நிலையத்திற்கு தான் வந்ததாகவும், விமான சக்கரத்தில் உள்ள லேண்டிங் கியரில் பயணித்ததையும் தெரிவித்துள்ளான்.
உடனே விமானத்தைப் பரிசோதித்த அதிகாரிகள் சக்கரத்தில் உள்ள ஒரு பெட்டியில் சிவப்பு நிற ஒலிப்பெருக்கியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அதனைப் பரிசோதனை செய்ததில் இதுவொரு சாதாரண ஒலிப்பெருக்கி தான் எனவும், சிறுவன் பாடல் கேட்க இதனைக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனை முடிவில் எவ்வித நாச வேலையும் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னர், அந்தச் சிறுவனை பாதுகாப்பு அதிகாரிகள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பினர்.
நேற்று காலை 11 மணிக்குப் புறப்பட்ட விமானம் 2 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மதியம் 1 மணியளவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
சுமார் 2 மணி நேரம் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவன் ஆகாயத்தில் பயணித்துள்ளான் என்பது ஆச்சரியமாக உள்ளது. திகில் நிறைந்த இந்தப் பயணம் இந்தச் சிறுவனுக்கு நிச்சயமாக மறக்க முடியாத பயணமாக இருக்கும்.