
தமிழ்நாட்டில் சென்னை இராயபுரம் மற்றும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையங்களுக்கு அடுத்து 3வது பழமையான இரயில் நிலையம் சென்னை எழும்பூர். இந்த இரயில் நிலையம் தொடங்கபப்டடு 117 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அண்மையில் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் எழும்பூர் இரயில் நிலையத்தை நவீன மயமாக்க 2024 இல் ரூ.900 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு. இதில் ரூ.750 கோடிக்கான பணிகள் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், தற்போது ரூ.150 கோடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் இந்தியாவில் நவீன இரயில் நிலையமாக காட்சியளிக்கும் என தெற்கு இரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குப் பயணிக்க முக்கிய இரயில் முனையமாக சென்னை எழும்பூர் இரயில் நிலையம் உள்ளது. இதுதவிர புறநகர் இரயில் சேவை மற்றும் மெட்ரோ இரயில் சேவையும் எழும்பூரில் இருப்பதால் நாள்தோறும் இலட்சக்கணக்கான பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இதனால் பழமை வாய்ந்த எழும்பூர் இரயில் நிலையததை நவீன மயமாக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன.
1906 ஆம் ஆண்டு ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேயரால் எழும்பூர் இரயில் நிலையம் கட்டத் தொடங்கப்பட்டது. சுமார் ரூ.17 இலட்சம் செலவில் 1.35 இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் சாராசெனிக் கட்டடக்கலை வடிவத்தில் இந்த இரயில் நிலையம் 1908 இல் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது வரை எழும்பூரில் 11 இரயில் நடைமேடைகள் உள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. காந்தி-இர்வின் சாலையில் 2 வழிகளும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 2 வழிகளும் அமையவுள்ளன. இரயில் பயணிகள் மட்டுமே உள்ளே செல்லும் வகையில் தானியங்கி கதவும் அமைக்கப்பட உள்ளது. எழும்பூர் இரயில் நிலையம் முற்றிலும் நவீனமாக மாற்றப்பட உள்ளதால், பயணிகளுக்கு இதுவொரு புதிய அனுபவமாக இருக்கும்.
மறுசீரமைப்பு பணிகள் வருகின்ற 2027 ஆம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நவீன மயமானால் எழும்பூர் இரயில் நிலையம் எப்படி இருக்கும் என்ற மாதிரி வரைபடம் தற்போது வெளியாகியுள்ளது.
பணிகள் முடிவடைந்த பிறகு, விமான நிலையம் போல் காட்சியளிக்கும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இனி எழும்பூர் இரயில் நிலையமும் சென்னையின் ஒரு புதிய அடையாளமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.