
கிரிக்கெட் உலகில் இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுக்க வரவேற்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் மதிப்பு ஏறுமுகத்தில் தான் செல்கிறது. அதிலும் நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக பட்டம் வெல்லாத பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் ஐபிஎல்-லின் பிராண்ட் மதிப்பு மட்டுமின்றி, பெங்களூர் அணியின் பிராண்ட் மதிப்பும் உயர்ந்துள்ளது. ஆனால் எப்போதும் முன்னணியில் இருந்த சென்னை அணியின் பிராண்ட் மதிப்பு இம்முறை சறுக்கியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார் விராட் கோலி. தரமான வீரர்கள் இருந்தும் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த பெங்களூர் அணிக்கு, 2025 இல் தான் விடிவுகாலம் பிறந்தது. இறுதிப்போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூர் அணியின் பிராண்ட் மதிப்பு சந்தையில் தற்போது ரூ.2,306 கோடியாக உயர்ந்துள்ளது.
முதலீட்டு வங்கி நிறுவனமான ‘ஹூலிஹன் லாகி’ ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிடும். அதேபோல் நடப்பாண்டும் மதிப்பீடு செய்து தனது அறிக்கையை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் பெங்களூர் அணியும், இரண்டாம் இடத்தில் ரூ.2,076 கோடி பிராண்ட் மதிப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளன.
முந்தைய ஆண்டுகளில் முதலிடத்தில் இருந்து வந்த சென்னை அணி ரூ.2,015 கோடி பிராண்ட் மதிப்புடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இம்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு கிட்டத்தட்ட 39.6% உயர்ந்து, ரூ.1,209 கோடியாக உள்ளது.
ஐபிஎல் பிராண்டுக்கான தனி மதிப்பு மட்டும் 13.8% உயர்ந்து ரூ.33,440 கோடியாக உள்ளது. ஐபிஎல் தொடரின் ஊடகம், விளம்பரம் மற்றும் வர்த்தகம் என அனைத்தையும் கணக்கிட்டால் இதன் ஒட்டுமொத்த மதிப்பு 12.9% உயர்ந்து ரூ.1.6 இலட்சம் கோடியாக உள்ளது.
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு:
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ.2,306 கோடி
2.மும்பை இந்தியன்ஸ் - ரூ.2,076 கோடி
3. சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.2,015 கோடி
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.1,947 கோடி
5. சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ.1,320
6. டெல்லி கேபிடல்ஸ் - ரூ.1,303 கோடி
7. ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.1,252 கோடி
8. குஜராத் டைட்டன்ஸ் - ரூ.1,217 கோடி
9. பஞ்சாப் கிங்ஸ் - ரூ.1,209 கோடி
10. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரூ.1,046 கோடி.