
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி 18 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், இன்றுவரை பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஒரு சாதனை படைக்கப்பட்டால், நிச்சயமாக அந்தச் சாதனையை வருங்காலத்தில் யாராவது ஒருவர் முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் முறியடிக்கவே முடியாத முத்தான 3 தனிநபர் சாதனைகள் உள்ளன. அந்தச் சாதனைகள் என்னென்ன? யார் படைத்தது என்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.
1. கிறிஸ் கெயில் 175* (66): அதிகபட்ச தனிநபர் ரன்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில், அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 66 பந்துகளைச் சந்தித்த கெயில், 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்தார். இப்போட்டியில் கிறிஸ் கெயில் வெறும் 30 பந்துகளிலேயே சதமடித்ததும் ஒரு சாதனை தான். ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகளைப் புரிந்த கெயில், நாட் அவுட் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார்.
டி20 போட்டிகளில் சதமடிப்பதே சாதனையாக இருக்கும் போது, 175 ரன்களைக் குவித்தது அசாத்தியமான சாதனை தான். கிறிஸ் கெயிலின் இந்தச் சாதனையை முறியடிக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது என்பது தான் பலருடைய பதிலாக இருக்கும்.
2. சுரேஷ் ரெய்னா 87 (25) - அதிகபட்ச பவர் பிளே ரன்கள்
சென்னை அணியின் ரன் மெஷினாக செயல்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா, பவர் பிளேவில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பவர் பிளேவில் வெறும் 25 பந்துகளிலேயே 87 ரன்களைக் குவித்து அசத்தினார் ரெய்னா. கடந்த வருடம் டிராவிஸ் ஹெட் பவர் பிளேவில் 26 பந்துகளைச் சந்தித்து 84 ரன்களைக் குவித்து, ரெய்னாவின் சாதனைக்கு அருகே வந்தார். இருப்பினும் இன்றுவரை ரெய்னாவின் இந்தச் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
3. விராட் கோலி 973 ரன்கள் - ஒரு சீசனில் அதிகபட்ச ரன்கள்
ஒரு ஐபிஎல் சீசன் முழுக்க ஒரு வீரரால் சிறப்பாக விளையாட முடிந்தால் மட்டுமே அதிக ரன்களைக் குவித்த வீரராக வலம் வர முடியும். விராட் கோலி அப்படி ஒரு வீரராகத் தான் பல ஆண்டுகள் இருந்தார். குறிப்பாக 2016 ஐபிஎல் தொடரில் கோலி உச்சபட்ச ஃபார்மில் இருந்தார் என்றால் அது மிகையாகாது. அந்த வருடம் மட்டும் 973 ரன்களைக் குவித்து அசாதாரணமான சாதனையைப் புரிந்து விட்டார் கோலி.
தன்னை ஏன் பலரும் ‘கிங் கோலி’ மற்றும் ‘ரன் மெஷின்’ என அழைக்கிறார்கள் என்பதை விராட் கோலி மீண்டும் நிரூபித்த ஆண்டு அது. இந்த சீசனில் கோலி 4 சதங்களை விளாசினார். இதன்மூலம் ஒரு சீசனில் அதிக சதங்களை விளாசிய வீரராகவும் கோலி சாதனை படைத்தார். இன்று வரை இந்தச் சாதனையும் முறியடிக்கப்படாமல் தான் இருக்கிறது.
தற்போது ஐபிஎல் விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த 3 சாதனைகளை முறியடிப்பது மிகவும் கடினம்.