

மழைக்காலம் வந்தாலே மக்கள் அனைவருக்கும் வரும் பெரிய பயம் டெங்கு காய்ச்சல். டெங்கு வைரஸ் (DENV) தொற்றுள்ள கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது. குறிப்பாக ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) கொசுக்கள் இந்த நோயை பரப்புகின்றன. இது காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகள் முதல் கடுமையான டெங்கு காய்ச்சல் வரை ஏற்படுத்தும். இது பொதுவாக தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, கண்களுக்குப் பின்னால் வலி மற்றும் தோல் தடிப்புகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் இந்த நோய் ரத்த கசிவு காய்ச்சலாகவும் மாறி ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் மரணத்தையும் ஏற்படுத்தும். இதற்கு breakbone fever என்ற பெயரும் உண்டு.
இந்த டெங்குவுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காத என்று பலரும் ஏங்கிக்கொண்டிருந்த நிலையில் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் பிரேசில் நாட்டில் இருந்து சூப்பரான வரலாற்று சிறப்பு மிக்க செய்தி வந்து அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரேசில் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இனிமேல் இரண்டு டோஸ் போட வேண்டிய தேவையில்லை. ஒரே ஒரு ஊசி போட்ட டெங்குவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைத்துவிடும்.
இது மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய தடுப்பூசியின் பெயர் 'புட்டான்டன்-டிவி'(Butantan-DV). பிரேசில் சாவோ பாலோவில் உள்ள புட்டான்டன் நிறுவனம் 8 ஆண்டுகள் நடத்திய தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. 12 முதல் 59 வயதுகுட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த பிரேசில் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம்(ANVISA) அங்கீகாரம் அளித்துள்ளது.
இது ‘பிரேசிலில் அறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான ஒரு வரலாற்று சாதனை’ என்று புட்டான்டன் நிறுவனத்தின் இயக்குனர் எஸ்பர் கல்லாஸ் (Esper Kallas)செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மேலும், பல தசாப்தங்களாக நம்மைப் பாதித்து வரும் ஒரு நோயை இப்போது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தால் எதிர்த்துப் போராட முடியும் என்று அவர் கூறினார்.
தற்போது, உலகளவில் கிடைக்கும் ஒரே டெங்கு தடுப்பூசி TAK-003 ஆகும், இதற்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய சிங்கில் டோஸ் தடுப்பூசியால், தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் வேகமாகவும், எளிமையாகவும் நடக்கும்.
இந்த தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்றால் 16,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில்
இந்த தடுப்பூசி கடுமையான டெங்குவுக்கு எதிராக 91.6 சதவீதம் செயல்திறனை கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிகப்பெரிய சிறந்த செயல்திறன் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு "வரலாற்று" சாதனை என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர், ஏனெனில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கொசுக்களால் பரவும் இந்த நோய் உலகளவில் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நோயை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் புவி வெப்பமயமாதல் காரணமாக தங்களுடைய வழக்கமான இடங்களை தாண்டி இப்போது ஐரோப்பா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளுக்கும் பரவத்தொடங்கி விட்டது.
2024-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 1 கோடியே 46 லட்சம் பேர் ( 14.6 மில்லியன்) டெங்குவால் பாதிக்கப்பட்டு சுமார் 12,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது. இது வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும். இதில் பாதி மரணங்கள் பிரேசிலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் இந்த புதிய தடுப்பூசியை 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 3 கோடி டோஸ்களை மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முதல் உள்நாட்டு டெங்கு தடுப்பூசியான 'டெங்கிஆல்' தற்போது 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பு டெங்கு இல்லாத ஒரு உலகத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையை நமக்கு கொடுத்துள்ளது.