

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 7,600 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடந்த நிலையில், இதில் 4,994 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன்படி சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை (ஏப்ரல் 9) வெளியாக இருக்கிறது. பல தொகுதிகளில் சில வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பிறகு ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதன்படி 234 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில், இதில் எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தவெக 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.
எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் எம்.அருண்குமார் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுவில் முன்மொழிபவர்கள் 7 பேர் மட்டுமே இருந்ததால், வேட்புமனு ஆய்வு செய்யப்பட்டபோது நிராகரிக்கப்பட்டது. பொதுவாக வேட்புமனுவில் முன்மொழிபவர்களின் எண்ணிக்கை 10-ஆக இருக்க வேண்டும்