

தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடப் போவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 6 தேர்தல் குழுக்களை அமைக்க தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு குழுவிலும் 10 பேர் இடம் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ள விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை பலப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழ்நாட்டில் ஏற்கனவே 132 மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தொகுதி வாரியாக பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும், ஐந்து தேர்தல் பணிமனைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொகுதி வாரியாக 6 குழுக்களை அமைக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. தவெக மாவட்ட செயலாளர்கள், 234 தொகுதிகளில் ஆறு குழுக்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தலைமை தெரிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் நபர்கள் அந்தந்த தொகுதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், ஒரு குழுவில் இடம் பெற்றவர் மற்றொரு குழுவில் இடம் பெறக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்குமுறை குழு, பூத் மேலாண்மை குழு, பிரச்சாரம் மற்றும் வாக்காளர்கள் குழு, தகவல் தொழில்நுட்ப குழு, போக்குவரத்து மேலாண்மை குழு மற்றும் உணவு மற்றும் விருந்தோம்பல் குழு என மொத்தம் ஆறு குழுக்களை அமைக்க தவெக தலைமையிடம் திட்டமிட்டுள்ளது.
மேலும் மாவட்ட செயலாளர்கள் தான் வேட்பாளர்கள் என யாரும் நினைத்து விடக்கூடாது. தவெக தலைவர் விஜய் கை காட்டுபவரே சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
விஜய் கைகாட்டும் வேட்பாளருக்கு மாவட்ட செயலாளர்கள் உட்பட தவெக நிர்வாகிகள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்