

தமிழ்நாட்டில் முதியோர் உதவித் தொகையுடன் கூடுதலாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்று முன் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத உதவித் தொகையுடன் கூடுதலாக தற்போது சிறப்பு நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விளிம்பு நிலையில் இருக்கும் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்ச் மாத உதவித் தொகையுடன் கூடுதலாக கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2,000 சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உடன் கூடுதலாக 2,000 சேர்த்து ரூ.3,500-யும், கைம்பெண்களுக்கு ரூ.1,200 உடன் சேர்த்து ரூ. 3,200 வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 37,79,000 பேர் பயன்பெறுகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைகால சிறப்பு நிதி என மொத்தம் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் கைம்பெண்களுக்கும் கோடைகால சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* 1,62,800 மீனவர்களுக்கு ரூ. 8,000 மீனவர் தடைக்கால உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
* நீலகிரி மாவட்டத்தில் 14,870 விவசாயிகள் பயன்பெறும் வகையில், பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2 உயர்த்த, ரூ. 8.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளி பராமரிப்பு தொகை பெறும் 2.58 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 4,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.