

தமிழக முதல்வரின் பல்வேறு நிதி உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வெவ்வேறு இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரத்தியேகமாக ஒரு புதிய இணையதளத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவாகவும், எளிதாகவும் நிதி உதவி கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வருகிறது. கடந்த 2 மாதங்களில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட பெரிய சாலை விபத்துகள் நடந்துள்ளன.
சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக காவல் துறையும், போக்குவரத்து துறையும் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை அறிவுறுத்தி வரும் நிலையில், போக்குவரத்து விதி மீறல்களே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன
போக்குவரத்து விதிமுறைகளை குடிமக்கள் அனைவரும் பின்பற்றினால் விபத்துகளின் எண்ணிக்கையை நிச்சயமாக குறைக்கலாம். பொதுவாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது வழக்கம்.
விபத்து ஏற்பட்ட உடனேயே தமிழக அரசு நிதி உதவியை அறிவித்து விடும். ஆனால் அந்த நிதி உதவி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கிடைக்க சில நாட்கள் ஆகும். இந்த கால தாமதத்தை குறைக்கும் விதமாக தமிழக அரசு தற்போது ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக விண்ணப்பித்து, விரைவாக நிதியுதவி பெற்றுக் கொள்ள முடியும். விபத்தில் உயிரிழந்தோர் அல்லது படுகாயமடைந்தோரின் குடும்பத்தினர், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி (CMARF) திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (cmarf.tn.gov.in) மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
இந்த இணையதளத்தின் மூலம், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர் கால தாமதமின்றி விரைவாகவும், எளிதாகவும் நிதியுதவியைப் பெற முடியும். cmarf.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால், நேரடியாக உங்களுடைய வங்கிக் கணக்கிற்கே தமிழக அரசின் நிதியுதவி வரவு வைக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.
விண்ணப்பிக்கும் முறை:
* cmarf.tn.gov.in என்ற இணையதளத்தகற்கு சென்று, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
* பிறகு ஓடிபி-யை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
* விபத்து நடந்த தேதி, இடம், பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து நிதியுதவியைப் பெற சமர்ப்பிக்க வேண்டும்.
* இந்த இணையதளம் பாதுகாப்பான வேகமான செயல்முறை மற்றும் வேகமான அனுமதியை வழங்கும் என்பதால், விரைவிலேயே நிதியுதவி உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்.
அரசின் இந்த புதிய சேவை, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரைவான அணுகலை வழங்கும் என்பதால், பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.