

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத்திற்கு தலைமை தாங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆஸ்திரேலிய ராணுவம் தோற்றுவிக்கப்பட்ட 125 ஆண்டுகளில் முதல்முறையாக அதன் தலைமைத்தளபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்று சாதனையாகும். ஆஸ்திரேலிய இராணுவத்தின் எந்தவொரு படைப்பிரிவையும் வழிநடத்தும் முதல் பெண் இவரே ஆவார். இதனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் ஒரு "மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்" என்று பாராட்டி உள்ளார்.
அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த நியமனத்தை உறுதிசெய்ததுடன், இது நாட்டின் தற்காப்புப் படைகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Lieutenant General Susan Coyle)இந்தாண்டு ஜுலை மாதம் முதல் அந்நாட்டின் ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்பார் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2030ம் ஆண்டுக்குள் ராணுவத்தில் பெண்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பை 25% ஆக உயர்த்துவதை ADF ஒரு இலக்காக நிர்ணயித்துள்ளது. அதன் ஒருபகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலிய ராணுவத்தின் பாதுகாப்புப் படையில் (ADF) சுமார் 21% பெண்களும், மூத்த தலைமைப் பொறுப்புகளில் 18.5% பெண்களும் உள்ளனர்.
யார் இந்த சூசன் கோய்ல்?
55 வயதான சூசன் 1987-ல் இராணுவத்தில் சாதாரண சிப்பாயாக சேர்ந்த இவர் கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக போர்முறை உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 2024 முதல் 'கூட்டுத் திறன்களுக்கான' (Chief of Joint Capabilities) தலைவராக பணியாற்றி வருகிறார். இப்பதவியில் விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்பு துறைகளில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரது சிறந்த சேவையை பாராட்டி ஆஸ்திரேலிய அரசு அவருக்கு ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ (Order of Australia)உள்ளிட்ட உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படை அகாடமியில் அறிவியல் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே, இராணுவக் காப்புப்படையில் (Army Reserves) இணைந்திருந்தார். அமெரிக்க ராணுவ போர் கல்லூரியின் சிறப்பு பட்டதாரி மற்றும் ஹார்வர்ட் மேலாண்மை திட்டத்தின் முன்னாள் மாணவர் ஆவார். 1992-ஆம் ஆண்டு ராயல் இராணுவக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், 'ராயல் ஆஸ்திரேலிய சிக்னல்ஸ் படைப்பிரிவில்' (Royal Australian Corps of Signals) இணைந்தார்.