

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன முன்னணி கட்சிகள். திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ், இம்முறை கூட்டணியில் நீடிக்குமா அல்லது தவெக உடன் கூட்டணி வைக்குமா என்று அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் தொடரும் என்பதை மறைமுகமாக சொல்லி விட்டது. கடந்த சனிக்கிழமை அன்று ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணியைப் பற்றி எந்தத் தகவலும் வெளிவரவில்லை.
ஆலேசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என ஒரு தரப்பினரும், திமுகவுக்கு எதிராக மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைமை முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
செல்வப்பெருந்தகைக்கு எதிராக இருக்கும் 25-க்கும் மேற்பட்டோரின் பதவியை தற்போது காலி செய்துள்ளது காங்கிரஸ் மேலிடம். இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். புதிய மாவட்ட செயலாளர்கள் பலரும் செல்வப்பெருந்தகைக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிட்டுத்தக்கது. மேலும் இவர்களில் 61% பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள்.
திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் மேலிடம் ஆதரவு அளிப்பதால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளது அக்கட்சி மேலிடம். மேலும் புதிய மாவட்ட செயலாளர்களும் திமுக கட்சியுடன் கூட்டணி வைப்பதில் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு செல்வப்பெருந்தகை நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது
காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவுக்கு எதிராகவே பேசியிருந்தனர். திமுகவில் இருந்து விலகி வேறொரு கட்சியுடன் கூட்டணி வைப்பதில் இவர்கள் தரப்பினர் உறுதியாக இருந்தனர். ஆனால் இதனை காங்கிரஸ் தலைமை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக ஜனநாயகன் பட ரிலீஸ் தொடர்பான தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தவெக-வுடன் கூட்டணி வைக்குமா என்ற பேச்சுகள் அரசியல் களத்தில் அடிபட்டன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக கூட்டணியில் தொடர விரும்பும் காங்கிரஸ் நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்களாக நியமித்துள்ளது காங்கிரஸ்.