

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைவது தற்போது உறுதியாகி உள்ளது. காங்கிரஸுக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும் திமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் காங்கிரஸ் நிர்வாகி சோடங்கர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்று பல்வேறு பேச்சுகள் எழுந்தன. 30-க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில் இரு தரப்பிலும் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடைந்து தற்போது 28 சட்டமன்ற தொகுதிகள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை இடமும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலையில் இருந்தே செல்வப் பெருந்தகை மற்றும் சோடங்கர் ஆகிய இருவரும் சென்னை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்த பிறகு, காங்கிரஸ் நிர்வாகிகளும் அங்கு சென்று கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
ஏற்கனவே தேமுதிக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் சூழலில், தற்போது காங்கிரஸும் இணைந்திருப்பதன் மூலம் பல நாட்களாக பரப்பப்பட்டு வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, திமுக கூட்டணியில் தொடரலாமா அல்லது வேறு கூட்டணிக்கு மாறலாமா என்பது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக தர மறுத்ததால் கூட்டணி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் போட்டியிடும் என்பதை உறுதிப்பட தெரிவித்திருந்தார். அதற்கேற்ப தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதி பங்கீடு அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாகியுள்ளது.