

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகளை இணைக்கும் முயற்சி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சற்று முன் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் இருவரும் சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் பழனிசாமி வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று காலை உணவுக்கு வநதிருக்கிறோம் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
காலை உணவை முடித்த பிறகு கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் நாளை தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமான பொதுக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் யாரெல்லாம் பங்கேற்பார்கள், பிரதமர் மோடியுடன் நாளை யாரெல்லாம் மேடை ஏறுவார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தற்போது கூட்டணியில் உள்ள தலைவர்கள் மட்டுமே நாளை பிரதமருடன் மேடையேற இருக்கிறார்கள்.
இது தவிர தேமுதிக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் நிலைப்பாடு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவார்களா அல்லது திமுக பக்கம் சாய்வார்களா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமமுக தலைவர் டிடிவி தினகரன் நேற்று அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் நாளை பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் எடபபாடி பழனிசாமி, அன்புமணி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். இந்நிலையில் என்டிஏ கூட்டணி சார்பில் உங்களுக்கு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு, எவ்வித பதிலையும் சொல்லாமல் சென்றுள்ளார் ஓபிஎஸ்.