

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிக்கன் குனியா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதவிர முன்கூட்டிய பரிசோதனைகள், டெங்கு, சிக்கன் குனியா பாதிப்புக்கு தனி வார்டுகள் அமைப்பது மற்றும் நடமாடும் மருத்துவக் குழு அமைததல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொசுக் கடிப்பதால் உருவாகும் சிக்கன் குனியா பாதிப்பு, தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி, தேனி மற்றும் அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிக்கன் குனியா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிக்கன் குனியா பாதிப்பைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை சில முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
1. சிக்கன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.
2. அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்களுக்கு என்று தனித்தனி வார்டுகள் அமைக்க வேண்டும்.
3.. நடமாடும் மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உதவி தேவை என்றவுடன் இந்த மருத்துவக் குழு, அடுத்த சில நிமிடங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தயாராக இருத்தல் அவசியம்.
4. நோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் எலிசா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து உபகரணங்களையும் கையிருப்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.
5. தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். மேலும் இது குறித்து சுகாதார பணியாளர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
6. கொசு உற்பத்தியை தடுத்திடும் வகையில், வீடு தோறும் போதிய நபர்கள் பணியில் இருக்க வேண்டும்.
7. காய்ச்சல் பாதிப்பு பதிவாகும் இடங்களில் தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
8. சிக்கன் குனியா தொடர்பான போதிய விழிப்புணர்வுகளை சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொசு பரவலை தடுத்திடும் வகையில் சென்னையில் நேற்று பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகளுக்கு கொசுவலையைப் பொருத்தியது சென்னை மாநகராட்சி. சிக்கன் குனியா பரவலை தடுத்திட, முதலில் கொசு பரவலை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கையை நடவடிக்கை எடுத்துள்ளது.