

டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர் கொண்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை மார்ச் 5 ஆம் தேதி எதிர்கொள்ளும் என்ற பரபரப்பான சூழலில், ஆட்டம் தொடங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 196 ரன்களை 19.2 ஓவர்களில் எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அதிரடியான வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
அரையிறுதி போட்டிக்கு ஏற்கனவே இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் நான்காவது அணி எது என்ற முக்கியமான போட்டியில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸும் மோதின. அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்யும் போட்டி என்பதால், இது கிட்டத்தட்ட காலிறுதிப் போட்டியாகவே பார்க்கப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி ராஸ்டன் சேஸ் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, பவர் பிளே முடிந்ததும் அதிரடி ஆட்டத்தை முன்னெடுத்தனர். கேப்டன் சாய் ஹோப் 32, ராஸ்டன் சேஸ் 40, ஹெட்மயர் 27 மற்றும் ரூதர்ஃபோர்டு 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் ஜேசன் ஹோல்டர் மற்றும் பவல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்ததால், 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களை எடுத்தது. ஹோல்டர் 37 ரனகளுடனும், ராவ்மன் பவல் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி தரபபில் ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் கண்ட இந்திய அணிக்கு, சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்கத்தில் நம்பிக்கை தரும் விதமாக விளையாடினர்.
ஆனால் 3வது ஓவரில் அபிஷேக் சர்மா மற்றும் 5வது ஓவரில் இஷான் கிஷன் ஆகியோர் தலா 10 ரன்களில் ஆட்டமிழக்க 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது இந்தியா. இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார்.
நிதானமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 18 ரன்களுக்கும், அடுத்து வந்த திலக் வர்மா 27 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
இறுதியில் இந்திய அணி 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக 97 ரன்களை குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி, தனது அதிகபட்ச இலக்கை துரத்திப் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதிகபட்சமாக 173 ரன்களை சேஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.