

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து, PSLV C62 என்ற ராக்கெட் சற்றுமுன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் EOS-N1 என்ற செயற்கைகோளுடன், 18 சிறிய செயற்கைகோள்களும் ஏவப்பட்டுள்ளன. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
EOS-N1 (Earth Observation Satellite - Next Gen 1) செயற்கைகோளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) உருவாக்கியது. EOS-N1 செயற்கைகோளானது புவியின் கண்காணிப்பில் முக்கிய பங்கு வகிக்கும். அதோடு இந்த செயற்கைகோள் அன்வேஷா (Anvesha) என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த ராக்கெட்டில் விண்வெளியிலேயே எரிபொருளை நிரப்பும் இந்தியாவின் முதல் செயற்கைகோளான AayulSAT ஏவப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கிய KID என்ற விண்கலமும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் இந்தியா ஏவிய முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
PSLV C62 ராக்கெட் ஏவுதலுக்கான கவுணட் டவுன் நேற்று காலை 10:17 மணிக்குத் தொடங்கியது. ராக்கெட் ஏவப்படுவதை முன்னிட்டு திருவள்ளூர் மற்றும் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி இன்று காலை 10:18:30 மணிக்கு அதாவது ஒரு நிமிடம் தாமதமாக PSLV C62 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த செயற்கைகோளில் உள்ள முக்கிய அம்சமே ‘ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ தான். சாதாரண செயற்கைக்கோள்கள் சிவப்பு, பச்சை மற்றும் நீளம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே பிரித்து பகுப்பாய்வு செய்யும்.
EOS-N1 செயற்கைகோளானது, ஒளியின் 100-க்கும் மேற்பட்ட நுணுக்கமான அலைநீளங்களை திறம்பட பிரித்துப் பார்க்கும். பூமியில் உள்ள மிகச்சிறிய பொருள்களை கூட உற்று கவனிக்கும் அதிநவீன உணரிகள் இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவின் ‘விண்வெளி கேமிராவாக’ EOS-N1 செயற்கைக்கோள் செயல்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் எல்லிப் பகுதிகளில் எதிரி நாட்டு ராணுவத்தின் பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பு கூடாரங்களை மிகத் துல்லியமாக கண்டறியும் திறனைக் கொண்டுள்ளது EOS-N1 செயற்கைக்கோள். விவசாய பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டறியும் திறன் கொண்டதால், இந்த செயற்கைக்கோள் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மண்ணில் உள்ள ஈரப்பதம் மற்றும் தாதுக்களை இது கண்டறிய உதவுகிறது.
மலைப்பகுதிகள் மற்றும் காடுகளில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள உலோகங்களை அதன் வெப்பம் மற்றும் ஒளித்திறனைக் கொண்டு மிகத் துல்லியமாக EOS-N1 செயற்கைக்கோள் கண்டறியும். எல்லைப் பகுதிகளில் செய்யப்படும் மாற்றங்கள், காடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கடல் நீர் மாசுபாடு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் எங்கெல்லாம் உயர்ந்துள்ளது போன்ற தகவல்களை EOS-N1 செயற்கைக்கோள் மிகத் துல்லியமாக அளிக்க வல்லது.
EOS-N1 செயற்கைக்கோள் அளிக்கும் தரவுகள் அதிகம் என்பதால், இதனை பகுப்பாய்வு செய்வது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவோம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணிலிருந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை ஏவிய அமெரிக்கா மற்றும் சீனா வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்திருப்பது, பெருமைமிகு தருணமாகும்.