

2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் இன்று காலை 9:30 மணி முதல் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இந்த முறையும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.
நடப்பு ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்து, அடுத்த ஆட்சி அமைந்ததும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மேலும் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், பொதுமக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
மாணவர்களுக்கான அறிவிப்புகள்:
* அரசு பள்ளிகளை மேம்படுத்த முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
* இடைக்கால பட்ஜெட்டில் ரூ.48,534 கோடி பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8,505 கோடி உயர் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சம் மாணவர்களுக்கும் மேல் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
* இதுவரை 6.75 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
* மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டி தேர்வுகளை எதிர் கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
* மாணவர்கள் உயர் கல்வி வரை இடைநில்லாமல் கல்வி பயில, தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
* அனைத்து சமூக நலத் திட்டங்களுக்கும் ரூ.5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு முதல்வர் படைப்பகம் மற்றும் நூலகம் அமைக்க 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 11 பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பததின் பாடத்திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எண்ணற்ற தமிழக மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.