

நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் சற்றுமுன் தொடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், மத்திய அரசின் கொள்கைகள் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விவரித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 28) தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை முதல் கட்டமாக நடக்கவுள்ளது. அதன்பிறகு ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது கட்டமாக மீண்டும் மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
குடியரசு தினத்தன்று பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடந்ததால், நாளை (ஜனவரி 29) தேசிய பாதுகாப்புப் படையினர் பாசறைக்குத் திரும்பவுள்ளனர். இதன் காரணமாக நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாது.
நாளை மறுதினம் (ஜனவரி 30) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜனவரி 31-ம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல்கள் நடைபெறாது.
வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுவரை இந்திய வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதே இல்லை. இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தொடர்ந்து 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவரது இந்த சாதனையை தற்போது சமன் செய்ய உள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும் தொடர்ந்து 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிர்மலா சீதாராமன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இரண்டாவது கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது. பல்வேறு துறைகளின் நிலைக் குழுக்கள், மானியங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்த 1 மாத கால இடைவெளி உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் மாதச் சம்பளக்காரர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் இப்போதே எழுந்து விட்டன. குறிப்பாக வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு வரி அட்டவணை எப்படி மாறப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
இது தவிர மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரிக்குறைப்பு நடவடிக்கைகள் இருக்குமா? நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? என்பது குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் எளிமையான விதிமுறைகளும், வரிக் குறைப்புகளும் இடம்பெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.