

நிலத்தின் உரிமை சார்ந்த விஷயங்களில் மிகவும் முக்கியமானது பட்டா. நிலத்திற்கான பத்திரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நிலத்தின் பல்வேறு தகவல்களைக் கொண்ட பட்டாவும் முக்கியம். பொதுவாக பட்டாவில் தோராய பட்டா மற்றும் தூய பட்டா என்று 2 வகைகள் உண்டு.
இதில் தூய பட்டாவிற்கே சட்ட மதிப்பு அதிகம். ஏனெனில் தூய பட்டாவில் பிழைகள் ஏதுமின்றி, அனைத்து தகவல்களும் மிகத் துல்லியமாக இருக்கும். இந்நிலையில் தோராய மற்றும் தூய பட்டாவுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை பொதுமக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பட்டா எவ்வளவு முக்கியம் எனபது குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.
விவசாய நிலங்கள் அல்லாத குடியிருப்பு நிலங்கள், அரசு சார்பில் நத்தம் நிலமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். நத்தம் நிலம் உள்ள பகுதிகளில் நிலமில்லாத ஏழை மக்கள் மற்றும் ஒரே இடத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்படும். இந்தப் பட்டா தான் தோராய பட்டா என அழைக்கப்படும்.
நத்தம் நிலங்களில் உள்ள வீடுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றைப் பிரித்து புதிய வரைபடத்தை வருவாய்த் துறை தயாரிக்கும். பிறகு இந்தப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு சர்வே எண்கள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு தோராய பட்டா வழங்கப்படும்.
சர்வே பணிகளை அளவிட்டு தோராய பட்டா வழங்கப்பட்டிருந்தாலும் அதில் உரிமையாளரின் பெயர், சர்வே எண் மற்றும் நில அளவை உள்ளிட்டவற்றில் சில பிழைகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இந்நிலையில் இந்தப் பிழைகளை திருத்திக் கொள்ள அரசு சார்பில் 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
தோராய பட்டா கிடைத்தவுடன் அதில் பிழைகள் இருக்கும் பட்சத்தில் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று பிழைகளை திருத்திக் கொள்ள பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும். தோராய பட்டாவில் உள்ள பிழைகள் அனைத்தும் திருத்தப்பட்ட பிறகு நில உரிமையாளரின் பெயர், நிலத்தின் எல்லை, வரைபடம் மற்றும் நிலத்தின் அளவு அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே தூய பட்டா வழங்கப்படும்.
தூய பட்டா பெற தேவையான ஆவணங்கள்:
1. நிலத்தின் விற்பனை பத்திரம் அல்லது வாரிசு ஆவணங்கள்
2. நிலத்தின் வரைபடம்
3. பழைய பட்டா
4. சிட்டா, அடங்கல்
5. நிலவரி ரசீது
6. நில உரிமையாளரின் அடையாள ஆவணம்.
மேற்கண்ட ஆவணங்களைக் கொண்டு தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது தமிழ்நாடு e-services இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலோ தூய பட்டா பெற விண்ணப்பிக்கலாம். நிலத்தின் ஆவணங்களும் உரிமையும் தெளிவாக இருந்தால், விரைவாகவே துயபட்டா கிடைத்து விடும்.
ஒருவேளை நிலத்தின் மீது ஏதேனும் வழக்குகள் பதிவாகி இருந்தாலோ அல்லது வாரிசு தகராறு ஏற்பட்டிருந்தாலோ அல்லது எல்லைப் பிரச்சினை இருந்தாலோ தூய பட்டா கிடைக்க தாமதமாகும்.
இதுதவிர தூய பட்டா பெற விண்ணப்பிக்கும் நிலம், அரசு நிலம் என சந்தேகிக்கப்பட்டாலும் தூய பட்டா கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும்.
தூய பட்டாவிற்கு விண்ணப்பித்த பிறகு, நிலமுள்ள கிராமத்தின் விஏஓ மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்ய வருவார்கள். யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் 30 முதல் 60 நாட்களுக்குள் தூய பட்டா கிடைத்துவிடும்.
ஒருவேளை நிலத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அந்தப் பிரச்சினைகள் தீர்ந்த பிறகே தூய பட்டா கிடைக்கும். நிலம் தொடர்பான அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் பட்டா மிகவும் அவசியமானது.
ஒரு நிலத்தின் மீது இருவர் உரிமை கொண்டாடும் போது, அதனை சட்டப்படி எதிர்கொள்ள பட்டா தான் உதவியாக இருக்கும். வங்கி கடன் பெறுவது முதல் அரசின் நலத்திட்டங்களில் பயன்பெறுவது வரை அனைத்திற்கும் பட்டா தேவை என்பதால், பட்டா குறித்த விஷயங்களில் பொதுமக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.