

அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 18 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸ், தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்தல் அறிக்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கை முன்னாள் எம்.பி.செந்தில் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை தி.நகரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது.
அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “எப்போதும் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் சிறப்பாக இருக்கும். தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு நாங்கள் அளிக்கும் சத்தியம். தேர்தல் அறிக்கை கதாநாயகனோ அல்லது ஹீரோவோ கிடையாது.
இம்முறையும் நாங்கள் மருத்துவம், கல்வி, வேளாண்மை மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் மதுவை ஒழிக்க நாங்கள் பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இம்முறை மதுவை ஒழிப்போம். பாமகவின் தேர்தல் அறிக்கை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை:
1. தமிழ்நாட்டில் 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
2. படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்.
3. அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
4. பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
5. போதை மற்றும் புகைப் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கொண்டுவரப்படும்.
6. போதைப் பொருள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 10,000 பரிசு.
7. 1 டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.
8. நெல் முதல் எள் வரை, பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்து வேளாண் பொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.
9. பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
10. ரேஷன் கடைகளில் 2கிலோ நாட்டு சர்க்கரை வழங்கப்படும்.
11. வேளாண் துறை மார்க்கெட்டிங் செய்ய புதிய அமைச்சர் பதவி உருவாக்கப்படும்.
12. தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு 1 வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
13. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்.
14.தமிழ்நாட்டின் 2வது தலைநகரமாக திருச்சியை மாற்றுவோம்.
15.குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
16.100 நாள் திட்டத்தை 150 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
17.அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்படும்.
18.ஞாயிற்றுக்கிழமையில் ரூ.25-க்கு அசைவ சாப்பாடு வழங்கப்படும்.
19.ரூ.10-க்கு மக்கள் சாப்பாட்டு திட்டம் தொடங்கப்படும்.
20.அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி நிறுவப்படும்.
21.நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.