

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீஸாரும் குற்றவாளிகள் தான் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இதன்படி இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளின் சொத்து விவரம், முந்தைய சம்பளம் மற்றும் உடல்நிலை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சாத்தான்குளம் வழக்கு இன்று காலை 9-வது வழக்காக மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தணடனை விவரம் மதியம் 2:30 மணிக்கு அறிவிக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி முத்துக்கமரன்.
இந்நிலையில் அரசு தரப்பினர் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து தண்டனை விவரத்தை வருகின்ற ஏப்ரல் 2-ம் தேதி ஒத்தி வைப்பதாக நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் செல்போன் கடையை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது ஊரடங்கில் விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி, இவர்கள் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். நீதிமன்ற காவலில் இருந்த இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு 2020 ஜூன் 22-ல் மகன் பென்னிக்ஸ் உயிரிழக்கவே, அடுத்த நாளே தந்தை ஜெயராஜும் உயிரிழந்தார். இந்த லாக்கப் மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது
சிபிஐ விசாரணையில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் பால்துரை என 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பால்துரை 2020-ல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளித்தார் நீதிபதி முத்துக்குமரன். தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 2-ம் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.