

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீஸாரும் குற்றவாளிகள் தான் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இதன்படி இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
மேலும் குற்றவாளிகளின் சொத்து விவரம், முந்தைய சம்பளம் மற்றும் உடல்நிலை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் தணடனை விவரம் ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி முத்துக்குமரன்.
சிபிஐ விசாரணையில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் பால்துரை என 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பால்துரை 2020-ல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றவாளிகளான 9 போலீஸாரும் கொலை செய்யும் நோக்கத்தோடு அவர்களை அடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதோடு எங்களுக்கு கடைசி வாய்ப்பு ஒன்றை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பு வழக்குறைஞர் வலியுறுத்தியுள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரும் 9 போலீஸாருக்கும் இரட்டை ஆயுள் அல்லது தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் சிபிஐ தரப்பு வாதிட்டுள்ளது. ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கி, இருவரையும் கொலை செய்துள்ளதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தண்டனை விவரம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென வரும் திங்களன்று தண்டனை அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் தண்டனை அறிவிப்பு வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு..
திங்கள் அன்று போலீசாருக்கு மரணதண்டனை கிடைக்குமா அல்லது வேறு கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்படுமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.