

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் செல்போன் கடையை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது ஊரடங்கில் விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி, இவர்கள் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரையும் நீதிமன்ற காவலில் கோவில்பட்டியில் உள்ள சிறைச்சாலையில் அடைத்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, 2020 ஜூன் 22-ல் மகன் பென்னிக்ஸ் உயிரிழக்கவே, அடுத்த நாளே தந்தை ஜெயராஜ் உயிரிழந்தார். இந்த லாக்கப் மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் பால்துரை என10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பால்துரை 2020-ல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பை மாலை 4 மணிக்கு ஒத்தி வைத்தது மதுரை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைக்கப் போவதால், இன்று நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துகுமரன் சற்றுமுன் தீர்ப்பை வாசித்தார்.
நீதிபதி முத்துக்குமரன் வாசித்த தீர்ப்பில், "ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் துறையினர் தாக்கியதால் தான் காயம் ஏற்பட்டது என்பது விசாரணையில் நிரூபணம் ஆகியுள்ளது. இவர்களின் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. கைகளை கட்டி தொங்கவிட்டு போலீஸார் அடித்திருப்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. 200 முறைக்கும் மேல் போலீஸார் தாக்கியதாக உறவினரிடம் பென்னிக்ஸ் கூறியிருக்கிறார். இரவு முழுவதும் 10 நிமிட இடைவெளியில் போலீஸார் அடித்துள்ளனர். அடித்துப் பழக தந்தை, மகன் கிடைத்திருப்பதாகவும் போலீஸார் கிண்டல் செய்திருப்பதும் சிபிஐ அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் தான். தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 காவல்துறையினர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை பல சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரித்த இந்த வழக்கில், சம்பவத்தன்று பணியில் இருந்த பெண் போலீசார் ரேவதி, பியூலா உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்து, இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் தடய அறிவியல் துறையின் அறிக்கை, காவல் துறைக்கு எதிரான முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் பலமுறை பிணை கோரி மனுத்தாக்கல் செய்தனர். இருப்பினும் இது வழக்கை பாதிக்கும் என்பதால் நீதிமன்றங்கள் அவற்றை நிராகரித்து வருகின்றன.