

இந்தியப் பிரதமராக கடந்த மூன்று முறையும் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய அரசாங்கத்தில் ‘நீண்ட காலம் அரசு பதவி வகித்த தலைவர்’ என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இதற்கு முன்னதாக சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் 8,930 நாட்கள் பதவியில் இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்தச் சாதனையை முறியடித்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் பணியாற்றியதை சேர்த்துக் கணக்கிடுவதன் மூலம், நீண்ட காலம் அரசுத் தலைவராகப் பணியாற்றிய முதல் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார். பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 7, 2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது நாட்டின் பிரதமராக தொடர்ந்து மக்கள் சேவையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடி கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேல், தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக பொறுப்பில் இருப்பது, அவருடைய அரசியல் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.
மார்ச் 22, 2026 நிலவரப்படி, பிரதமர் மோடி நிர்வாகத் தலைவராக 8,931 நாட்களைப் பூர்த்தி செய்தார். இதற்கு முன்னதாக சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங், 1994 முதல் 2019 வரை 8,930 நாட்கள் பதவியில் இருந்ததே, இதுவரை சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை முறியடித்து இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார் பிரதமர மோடி.
குஜராத் மாநில முதல்வராக 12 ஆண்டுகளுக்கும் மேலாக (4,600+ நாட்கள்) நரேந்திர மோடி பதவி வகித்துள்ளார். அதற்கு அடுத்து இந்தியப் பிரதமராக மே 26, 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை (4,300+ நாட்கள்) பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியின் மூலம், 3வது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், இந்த மைல்கல்லை எட்டுவதற்கு வழிவகை ஏற்பட்டது
நீண்ட கால தலைவராக பதவி வகிப்பது மட்டுமின்றி குஜராத் முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் நரேந்திர மோடி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்பது மற்றுமொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
பண்டிகை நாட்களை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் பிரதமர் மோடி, தனது தாயார் மறைந்த போதும் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு, உடனே தனது பணியைத் தொடர்ந்தார்.
இதற்கு முன்னதாக இதே மார்ச் மாதத்தில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 3 கோடி சந்தாதாரர்களைக் கடந்து, உலகத் தலைவர்களிலேயே முதலிடம் என்ற சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.