
கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 8 ஆம் தேதி ஒரு பள்ளி வேன் மீது இரயில் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் கடலூரில் ஒரு பள்ளி வேன் இன்று விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கத் தொடங்கின. கடலூர் விருத்தாசலத்தில் உள்ள பூவனூர் இரயில்வே நிலையம் அருகில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வேன் இன்று காலை விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு விருத்தாசலத்திற்கு அருகே உள்ள பூவனூர் இரயில் நிலையத் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் தடுமாறி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பள்ளி மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தண்டவாளத்திற்கு அருகே வந்து மாணவர்களை உடனடியாக வெளியேற்றினர்.
இருப்பினும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தகவலறிந்து உடனே மருத்துவமனைக்கு பிள்ளைகளைக் காண சென்றுள்ளனர்.
தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேனை நிமிர்த்தி, பொதுமக்கள் அப்புறப்படுத்தினர். தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த சமயத்தில் இரயில்கள் ஏதும் வராததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஜூலை 8 ஆம் தேதி கடலூரில் இரயில்வே கேட்டை கடக்க முயன்று, ஒரு பள்ளி வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் கடலூரில் ஒரு இரயில் விபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.