

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழர்கள் விரும்பி பார்ப்பது மட்டுமின்றி, வெளிநாட்டினரும் விரும்பி பார்க்கின்றனர். அவ்வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண, கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டினர் அதிக அளவில் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி அளவில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தொடங்கியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 900 மாடுபிடி வீரர்கள், 300 காளைகளை அடக்க களத்தில் இறங்கியுள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடத்தப்படும். தமிழ்நாட்டில் அதிகளவில் வாடிவாசலை கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டையில் உள்ள தச்சன்குறிச்சியில் தான் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் நடப்பு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையிடம் முறையாக அனுமதி கோரப்பட்டது. கால்நடைத்துறை அனுமதி வழங்கிய பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயப் புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு, தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா மேற்பார்வையிட்டார். தமிழ்நாட்டில் வீரம் நிறைந்த, பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளன.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அலங்காநல்லூர் அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்நிலையில் இன்று புதுக்கோட்டை தச்சன் குறிச்சியில் தொடங்கியுள்ள ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பொதுமக்கள் பலரும் கூடியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். அதேபோல் காளைகளின் உரிமையாளர்களும் ஆன்லைன் முன்பதிவை செய்தனர. காளைகளின் முன் பதிவுக்கு ஏற்ப, தச்சன்குறிச்சி வாடிவாசலில், ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
வாடிவாசல் களத்தில் சீறிப் பாய்கின்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கும் காட்சியையும், காளைகளின் வேகத்தையும் மற்றும் காளையர்களின் துணிச்சலையும் எண்ணற்ற பார்வையாளர்கள் நேரில் கண்டு ரசித்து வருகினறனர்.